புதிய அரசின் மீது இந்தியா நம்பிக்கை: அகதிகள் விடயத்தில் துரித நடவடிக்கை
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் தாயகத்திற்கு அனுப்பி வைப்பது குறித்து இரு நாடுகளினதும் அரச உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (30) புதுடில்லியில் கூடி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைப்புச் செயலர் சுசித்ரா துரை தலைமையில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை, நிதித்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், இலங்கையின் சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் துணைத் தூதர் எம்.ஆர்.கே. லெனகல தலைமையிலான குழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றினர்.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஏற்பட்டதன் பின்னர் உருவாகியுள்ள நல்லாட்சிக்கான நம்பிக்கையை அடுத்து இந்திய மத்திய, தமிழக மாநில அரசுகள் இலங்கை அகதிகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் தாயகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “இலங்கையில் நிலையான அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்கான உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இனியும் இலங்கைத் தமிழ் அகதிகளை இந்தியா வைத்துப் பராமரிக்க வேண்டி அவசியம் இல்லை. அவர்கள் தாயகம் திரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு சகல விதமான வசதிகளையும் வழங்கிக் குடியமர்த் துவதற்குப் புதிய அரசாங்கம் தயாராக உள்ளது.
எனவே, அகதிகளைத் தாராளமாகத் திருப்பியனுப்பலாம்” என்று வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக் காட்டியிருந்தார். அதேநேரம், இலங்கையின் புதிய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்துள்ளார்கள். ஆகவே, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் புதிய அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள அகதிகளும் தாயகம் திரும்பி தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழலாம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர எடுத்துரைத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் விடயத்தில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு விடயங்களை ஆராய்ந்துள்ளது.இந்தச் சந்திப்பின் போது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசு அளிக்கும் என்று இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வியெழுப்பியுள்ளதாகவும் முதலாவது கூட்டம் என்பதால் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிக்கலாம் என்பது குறித்தே இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை இணைச் செயலரும் செய்தித் தொடர்பாளருமான சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அகதிகளை விருப்பத்தின் பேரில் திருப்பி அனுப்பும்போது அவர்களுக்கு எத்தகைய வசதி, வாய்ப்புகள் இலங்கையில் உள்ளன என்பது குறித்து இந்தியா தரப்பில் கேட்கப்பட்டது. இரு தரப்பிலும் சில ஆவணங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதையடுத்து மீண்டும் இரு நாடுகளின் உயரதிகாரிகளும் கூடிப் பேசித் தீர்மானித்துள்ளனர். இதற்கான திகதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
இரு நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது,“இலங்கைக்கு விருப்பத்தின் பேரில் திரும்பிச் செல்லும் அகதிகளுக்கு அவர்களின் பூர்வீகப் பகுதியில் வீட்டு வசதி, வாழ்வாதாரத் திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐ.நா. அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின்படி சில திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் உருவாகியுள்ளது.
இத்திட்டங்களைச் செயல்படுத்தும் நிதியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது. அதேபோன்று திட்டங்களை இலங்கை அகதிகளுக்காக இந்தியா உருவாக்குமா? என இலங்கை தரப்பில் கேட்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை கொண்ட பட்டியலை இலங்கை துதரக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்தும் மீண்டும் இரு தரப்பிலும் விவாதித்த பிறகு தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு இக்குழுவினர் சென்று அங்கு வசிக்கும் அகதிகளிடம் தாயகம் திரும்புவது தொடர்பாக கருத்துக்களைக் கேட்பதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னர் அகதிகள் விடயத்தில் ஆராயுமாறு இந்திய மத்திய அரசு, தமிழக மாநில அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது. இதற்கமைய தமிழக பாராளுமன்ற குழுவொன்று அகதிகளைச் சந்தித்து மத்திய அரசுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால் தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய பாராளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு புதன்கிழமை இராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது.
அப்போது மண்டபம் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளிடமும் அந்த குழுவின் உறுப்பினர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர்.இது தொடர்பாக பேசிய அக்குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மூன்று வகையான கருத்துக்களை அம்மக்கள் கூறியதாகத் தெரிவித்தார். மீண்டும் தங்களுடைய நிலம் வீடுகளை அரசு திரும்ப அளிக்க வேண்டும் எந்தப் பிரச்சினையும் வராது என மாகாண அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் அப்படி இருந்தால் தாங்கள் திரும்பிச் செல்லத் தயார் என பெரும்பான்மையோர் தங்களிடம் கூறியதாக சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தங்களுக்கென அங்கே வீடு நிலம் போன்றவை இல்லை நாங்கள் திரும்பிச் சென்றால் வேலைவாய்ப்பு போன்றவற்றைச் செய்து தருவோம் என உத்தரவாதம் அளித்தால் திரும்பத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேறு சிலர் தாங்கள் நீண்டகாலமாக இங்கேயே வசித்து வருவதால் தொடர்ந்து இங்கேயே வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் கூறியதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.தமிழகத்தில் தங்போது சுமார் 34 ஆயிரத்து 5000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 55 அகதிகள் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 65 ஆயிரம் பேர் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 107 முகாம்களில் வசிக் கின்றனர். மீதமுள்ளவர்கள் அரசிடம் பதிவு செய்து கொண்டு முகாம் களுக்கு வெளியில் வசிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply