புதிய அரசு நூறு நாட்களுடனேயே இல்லாமல் போகலாம் – சுரேஷ் எம்.பி. எச்சரிக்கை!
தமிழ் மக்களின் பிரச்சினையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். காலம் கடக்க முன்பு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இதில் அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். காலம் கடத்தினால் இந்த அரசு நூறு நாட்களுடன் காணாமல் போனாலும் ஆச்சரியப் படுதவதற்கில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லெழுச்சிக்கான மக்கள் கலந்துரையாடல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்குமான சுதந்திர தினமல்ல. நாட்டில் உள்ள ஒரு தொகுதி மக்கள் அடைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். பல பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய சுதந்திர தினத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்காக கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் நூறு நாள் திட்டமான விடயத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் எந்த ஒரு விடயமும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் வடக்கு-கிழக்கில் வாழக்கூடிய தமிழ் மக்களுடைய பிரச்சினை உள்ளடக்கப்படவில்லை. அதாவது மீள் குடியேற்றம் அரசியல் கைதிகள் விடுவிப்பு காணாமல் போனோர் விடயம் எதுவுமே உள்ளடக்கப்படவில்லை. இந்த அரசு கொண்டு வந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு யுத்தத்துக்குப் பின்னரான விடயம் எதுவுமில்லை. ஆனால் கூட கடந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி ஒரு இராணுவ சர்வாதிகாரத்தைக் கொண்ட ஆட்சி அகற்றுவதற்கு மக்களுக்கு ஜனநாயக சூழல் தேவை. அதனை ஏற்படுத்துவதற்காக அனைவரும் இணைந்து முடிவெடுத்ததன் அடிப்படையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த புதிய ஆட்சியில் தமிழ் மக்களுடைய வாக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது.
ஆட்சி மாற்றம் இருபத்தொரு நாட்கள் கடந்துள்ளன. இந்த நூறு நாள் வேலைத்திட்டம் குறிப்பிடப்படும் நாட்கள் முக்கியமான நாட்ளாகவே கருதப்பட வேண்டியவை. நூறு நாட்கள் முடிவில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். ஆகவே இந்த 100 நாட்களும் முக்கியமான பெறுமதியான நாட்ளாகவே இருக்கும்.
ஆகவே தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகிய கூட்டமைப்பினர் தேர்தலுக்கு பிற்பாடு ஜனாதிபதி பிரதமர் சந்திரிகா மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு பல விடயங்களை பேசியுள்ளோம். இந்த நூறு நாட்களுக்குள் முழுமையாக மக்களை மீள்குடியேற்றாவிடினும் இயன்றவரையிலாவது மக்களை மீள் குடியேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம். வடக்கு – கிழக்கு உட்பட இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற வேண்டும். இதற்கு கால தாமதம் தேவையில்லை. புதிய அரசு மனம் வைத்தால் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து மக்களை மீள்குடியேற்ற முடியும். தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த புதிய அரசு குறுகிய அரசியல் இலாபம் பார்க்காது இந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைக்கக்கூடாது. வடக்கு-கிழக்கில் செறிவாக உள்ள இராணுவத்தினர் நாட்டின் ஏனைய பகுதிகளின் மாவட்டங்களுக்கும் சரியான முறையில் பகிர்ந்து நிறுத்தப்பட வேண்டும் இதன் மூலமும் ஓரளவு தீர்வைக் காண வேண்டும்.
நாம் எதிர்பார்ப்பது மீள்குடியேற்றத்தை தான். மீண்டும் புலிவரும் இராணுவம் தேவை என்ற கதைகளுடன் காலத்தை கடத்தலாகாது 100 நாட்களில் 100 திட்டம் என்றால் மீள் குடியேற்றம் அரசியல் கைதிகள் விடுவிப்பு பொதுமன்னிப்பு போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது கடினமான விடயமல்ல. அடுத்த தேர்தலுக்கு பிற்பாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ் மக்களின் பிரச்சினையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். காலம் கடக்க முன்பு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இதில் அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். காலம் கடத்தினால் இந்த அரசு நுறு நாட்களுடன் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்து வரப் போகும் பாராளுமன்றம் தொங்கு நிலை பாராளுமன்றமா? மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றமா? தேசிய அரசு அமைக்கப்போகும் பாராளுமன்றமா? என்பது யாருக்குமே தெரியாது. சகல மக்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களின் பிரச்சினைககளும் தீர்க்கப்பட வேண்டும். மக்களுடைய நிலைமை மாற்றமடைய வேண்டும். இன்றைய சுதந்திர தினத்தில் காணாமல் போனோர்களை கண்டுபிடிக்கவோ, மீள்குடியேற்றம் செய்வதற்கோ, அரசியல் கைதிகள் விடுவிப்போ எத்தகைய முடிவும் கிடைக்காத நிலையில் சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதை எண்ணிப்பார்க்க முடியாத கருமமாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply