சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமையை அர்த்தமற்ற வகையில விமர்சிக்கக் கூடாது
சிரேஷ்ட அரசியல்வாதியாகவும் ராஜதந்திர அரசியல் வல்லுனராகவும் விளங்கும் இரா. சம்பந்தன் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டதை அர்த்தமற்ற முறையில் விமர்சிப்பதை தமிழ் தலைவர்கள் தவித்துக்கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்பினரும் திருமலை மாவட்ட சமூக அமைப்பினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கந்தையா நடேசபிள்ளை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டது தொடர்பான அதிருப்தியை இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த துணைத்தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் வெளியிட்டுள்ளார். அவர் கட்சியின் மத்திய குழு உடனடியாக கூட்டப்பட்டு சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் விவாதிக்க வேண்டுமென ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கட்சியின் கூட்டு பொறுப்பை மீறி சிற்றம்பலம் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் நாகரீகமற்ற செயலாகும். புதிய அரசின் 100நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஏதும் தெரிவிக்கப்படாத சூழலில் இவ்விருவரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டது தவறு என சிற்றம்பலம் கூறியிருக்கும் விமர்சனமானது அர்த்தமற்றதும் அரசியல் பாடம் புரியாத செய்தியுமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை பொறுத்தவரை தீர்க்கமான ஞானமும் சாணக்கியமும் நிறைந்த ஒருவர் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது தீர்மானங்களும் முடிவுகளும் பிரித்தானிய யாப்பில் கூறப்பட்டது போல் மன்னன் தவறு செய்வதில்லையென்பதற்கு ஒத்ததாகும்.
புதிய ஆட்சி மாற்றத்தின் மூல கர்த்தாவாக விளங்கியவர் சம்பந்தன். அவர் மீது வடக்கு, கிழக்கு மக்கள் கொண்டிருக்கின்ற கனதியான நம்பிக்கைகள் எப்போதும் வீண்போக முடியாது. ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் மக்களை வாக்களிக்க சொன்னபோது காட்டாத எதிர்ப்பை சிற்றம்பலம் போன்ற சிலர் ஏன் இப்போது காட்ட முற்படுகின்றார்கள். என்பது புரியாத விடயமாகவேயுள்ளது. விடுதலை போராட்ட காலத்திலும் இத்தகைய அர்த்தமற்ற விமர்சனங்களாலேயே எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தோம். பாராளுமன்ற நடைமுறைகளையும் அரசியல்யாப்பு சத்தியங்களையும் பின்பற்றும் நாம் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என்ற விடயம் புரியாத புதிராகவேயுள்ளது.
66 வருட அரசியல் போக்கில் எதிர்ப்பு அரசியல்பால் கொண்ட நம்பிக்கைகள் எமக்கு எந்த பயனையும் தேடித்தரவில்லை. அமைச்சுப்பதவிகளுக்கோ அதிகாரங்களுக்கோ சம்பந்தன் ஆசைப்பட்டவர் கிடையாது. அவர் எச்சந்தர்ப்பத்திலும் தமிழினத்தை காட்டிக்கொடுத்த புல்லுருவியும் அல்ல. தமிழ் மக்களின் நீடித்த நிலையான தீர்வுக்காக தியாகங்களை புரிந்து வரும் சம்பந்தனை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply