ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது சாலை விபத்தில் அ.தி.மு.க. தொண்டர் பலி: ஜெயலலிதா இரங்கல்

ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த சாலை விபத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இறந்த அ.தி.மு.க. தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 13.2.2015 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மணிகண்டம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி ஒன்றியம், கொரசின்னம்பட்டி கிளைக் கழக செயலாளர் ஏ.வெள்ளைச்சாமி, கம்பிளியம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வெள்ளைச்சாமி அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், சிவசங்கரன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

என் உயிரினும் மேலான என தருமை தொண்டர்கள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வந்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று விலை மதிக்க முடியாத தொண்டர்கள் உயிரிழப்பது மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

தொண்டர்கள் இனி வரும் காலங்களில் எனது அன்பு வேண்டுகோளை ஏற்று, மிகுந்த எச்சரிக்கையுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கரன் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply