பிரான்ஸ், ஜெர்மனி அதிபர்கள் முன்னிலையில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம்
உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ரஷியா, உக்ரைன் நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி முன்னிலையில் 16 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, வியாழக்கிழமை நிறைவடைந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் கூறியதாவது: பேச்சு தொடங்கிய புதன் இரவு எனக்கு நல்ல இரவாக இருக்கவில்லை. ஆனால் வியாழன் காலையை அப்படிச் சொல்லிவிட முடியாது.ஏனெனில், கடினமான பேச்சுவார்த்தைக்குப் பின்பும் முக்கிய விவகாரங்களில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம்.
சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, கிழக்கு உக்ரைன் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது உள்ளிட்டவற்றில் உடன்பாடு கண்டுள்ளோம் என்றார் விளாதீமிர் புதின்.
எனினும், கிழக்கு உக்ரைன் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ மறுத்தார்.
பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறியதாவது:
உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் எட்டியுள்ளோம்.
போர் நிறுத்தம், எல்லைக் கட்டுப்பாடு, அதிகாரப் பகிர்வு, யுத்த முனையிலிருந்து கனரக ஆயுதங்களை அப்புறப்படுத்துவது, பொருளாதார உறவைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
ரஷிய, உக்ரைன் தலைவர்களுடன் இணைந்து, நானும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லும் போர் நிறுத்த அமலாக்கத்தை மேற்பார்வையிடுவோம்.
கிளர்ச்சியாளர்களுக்கு விளாதீமிர் புதின் போதிய அளவு நிர்பந்தம் கொடுத்தது பாராட்டுக்குரியது.
இந்த அமைதி ஒப்பந்தத்தால் ஐரோப்பாவே நிம்மதியடையும் என்றார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நான்கு தலைவர்களும் இந்த ஒப்பந்தம் குறித்து புகழ்ந்துரைத்தாலும், கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் தரப்பும் உடன்படிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
தற்போது மும்முரமாக சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு வசமுள்ள டெபால்ட்ஸெவா பகுதி குறித்து தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய நகரங்களை இணைக்கும் டெபால்ட்ஸெவா நகரைத் தக்கவைப்பதில் உக்ரைன் ராணுவமும், கைப்பற்றுவதில் கிளர்ச்சியாளர்களும் தீவிரமாக உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply