வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழிருக்கும் காணிகளை விடுவிப்பது வரவேற்கத்தக்கது
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காணிகளை விடுவிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் வடக்கில் காணிகளை விடுவிப்பதாக மாயையான செயற்பாடுகளை காட்டி மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களை அடைத்து வைக்கவே அரசு தொடர்ந்தும் செயற்படுவதாக குற்றம் சுமத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு எமக்களித்த வாக்குறுதிகளுக்கு அமைய வடக்கில் பொதுமக்களின் உரிய காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது.வடக்கின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென அரசு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆயிரம் ஏக்கர் காணியினை விடுவிப்பதாகவும் அவற்றில் இருநூறு ஏக்கர் பரப்பில் மீள்குடியேற்றத்துக்கான மாதிரி கிராமத்தினை அமைத்து பொதுமக்களை குடியமர்த்துவதாகவும் தெரிவித்தனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. வடக்கில் பொது மக்களின் வளங்களை உரிய மக்களுக்கே வழங்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திடம் தெரிவித்தோம்.
இப்பகுதியில் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 23ஆயிரம் பேர் மொத்தமாக குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் அதற்கான காரணங்களையும் தெரிவித்தோம். இதற்கமைய இவ்விடயம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டில் அரசாங்கமே உயர் நீதிமன்றத்தில் அறிவித்தலொன்றினை கொடுத்திருந்தது.
மேலும் ஜனாதிபதியின் வாக்குறுதியும் இக்காணிகளை விடுவிப்பது என்றே இருந்தது. எமக்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்தமைக்கு அமைய தற்போது காணிகளை பொது மக்களிடம் கொடுக்க வேண்டும். தற்போது வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதென அரசாங்கம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமே. ஆயினும் ஆயிரம் ஏக்கரில் அனைவரையும் குடியமர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இவ்விடுவிக்கப்படவுள்ள காணிகளில் உரிய மக்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல் ஏனைய மக்களின் காணிகளையும் உடனடியாக அம்மக்களுக்கு வழங்க வேண்டும். அரசாங்கம் சகல மக்களுக்கும் சாதகமான வகையில் செயற்படுவதாக கூறியது. அதைக் கைவிட்டுவிட்டு ஆயிரம் ஏக்கரில் இச்செயற்பாட்டினை மேற்கொள்ள முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே அரசாங்கம் எமக்கும் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக செயற்படுத்த நாம் அரசுக்கு வலியுறுத்து கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply