டெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 67 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வெறும் 3 இடங்களே கிடைத்தன. எதிர்க்கட்சியே இல்லை என்ற அளவுக்கு டெல்லி மக்கள் ஆம்ஆத்மிக்கு ஏகோ பித்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் 8–வது முதல்–மந்திரியாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.அவரை ஆட்சி அமைக்க வருமாறு டெல்லி கவர்னர் நஜீப் ஜங் அழைத்தார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்புக்கான விழா ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டன.

பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள் என்று டெல்லி மக்களுக்கு ரேடியோ மூலம் கெஜ்ரிவால் அழைத்திருந்தார். எனவே சுமார் 1 லட்சம் பேர் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டதால், அதற்கு ஏற்ப விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் அமர சுமார் 35 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டன. 12 இடங்களில் பெரிய திரைகள் அமைத்து பதவி யேற்பு நிகழ்ச்சிகளை நேரில் காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பதவி ஏற்பு விழா மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் டெல்லி மக்கள் அதிகாலை முதலே ராம்லீலா மைதானம் நோக்கி வரத் தொடங்கினார்கள். 10 மணிக்கெல்லாம் ராம்லீலா மைதானத்தில் பெரும் பகுதி நிரம்பி வழிந்தது.

மைதானத்தில் திரண்டிருந்த ஆம்ஆத்மி தொண்டர்கள் மேள தாளம் இசை முழங்க உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். மைதானம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு, மக்கள் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. 50 காமிராக்கள் பொருத்தப்பட்டு கூட்டம் கண்காணிக்கப்பட்டது.

11 மணிக்குப் பிறகு ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வரத் தொடங்கினார்கள். 11.45 மணிக்கு கெஜ்ரிவால் வந்தார். சிறிது நேரத்தில் கவர்னர் நஜிப்ஜங் வந்தார். இதையடுத்து ஆம்ஆத்மி அரசு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

மதியம் 12 மணிக்கு டெல்லியின் 8–வது புதிய முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் நஜிப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்று முடித்ததும் வெள்ளம் போல திரண்டிருந்த மக்களை நோக்கி வணங்கி கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

கெஜ்ரிவாலை தொடர்ந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், சந்தீப்குமார், ஜிதேந்திரதோமர், அசீம் அகமது கான் ஆகிய 6 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கும் கவர்னர் நஜிப்ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

சுமார் 15 நிமிடங்களில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா முடிந்தது. அதன் பிறகு கெஜ்ரிவால் மற்றும் புதிய மந்திரிகள் கவர்னருடன் படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் கெஜ்ரிவாலும் மந்திரிகளும் மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் கெஜ்ரிவால் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். காய்ச்சல் காரணமாக அவர் உடனடியாக அலுவலகம் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற மந்திரிகள் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று பொறுப்புகளை ஏற்றனர்.

இன்று பிற்பகல் 4.30 மணிக்கு கெஜ்ரிவால் தலைமையில் புதிய மந்திரி சபையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் டெல்லி மக்களுக்கு செய்ய வேண்டிய 70 அம்ச திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

டெல்லி சட்டசபை விரைவில் கூட உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். பிறகு சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

ஷாதரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ராம்நிவாஸ் கோயல் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். துணை சபாநாயகராக ஷாலி மார்பாக் தொகுதி எம்.எல்.ஏ. வந்தனா குமாரி தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply