வடமாகாணத்தினை அடுக்கடுக்கடுக்கான தீர்மானத்தினால் நிரப்புவதைவிடுத்து ஆளுக்கொரு பிரதேசங்களை தத்தெடுங்கள். உதயராசா வேண்டுகோள்

முப்பது வருட ஆயுத போராட்டத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்கும் தமிழர்களின் ஆளுமைக்கும் கிடைத்த நிர்வாக மையத்தை சிலர் தங்களின் சொந்த இலாபங்களுக்கும் அடையமுடியாத அரசியல் அபிலாசைகளுக்குமாக உருட்டி விளையாடுவது கவலையளிக்கிறது என சிறிரெலோகட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடமாகாணத்தின் மகத்துவத்தையும் மக்களின் சனநாயகத்தையும் மதிக்கும் வகையில் சபையின் நடவடிக்கைகள் அமையவேண்டுமே தவிர ஒன்றுக்கும் பிரயோசனமற்ற அடுக்கடுக்கான தீர்மானங்களை ஒரே கட்சியை சார்ந்தவர்கள் முன்மொழிந்து வழிமொழிந்து பத்திரிகையின் முன்பக்க செய்தியில் இடம்பிடிப்பதால் தமிழ் மக்களின் நலனில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
வடமாகாணசபையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எத்தீர்மானம் கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதியாக உள்ளது. இதற்குமாறாக செயற்பட்டால் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தலைவர் சிவகரனுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை என்ன என்பதனை சாதாரண அப்பாவி மக்கள் நன்கு அறிவர்.
நிலமை இவ்வாறிருக்க வடமாகாணசபை கூடுகின்ற போதெல்லாம் ஒவ்வொரு  புதிய தீர்மானங்களை கொண்டு வந்து ஒப்பாரி பாடுவதை நிறுத்தி தமிழ் மக்களினை ஆக்கபூர்வமான சமுதாயமாக மாற்றுவதற்கான வகையில் சபையின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதை வடமாகாணசபையின் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் ஆளுக்கொரு பிரதேசங்களை தத்தெடுத்து அபிவிருத்தி செய்தாலே வடமாகாணத்தின் வளர்ச்சியை வேறெந்த மகாணங்களும் எட்டிப்பிடிக்க முடியாதளவு தமிழ் சமூகம் வளர்ச்சி காண முடியும்.
கடந்த காலங்களில் தேசிய அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் மேற்கொண்ட கட்சிகளையும் தலைவர்களையும் துரோகிகளாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் சித்தரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மைக்காலமாக  புதிய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதுடன் மாற்றம் ஒன்றை தவிர மாறாதது இந்த உலகினில் வெறெதும் இல்லை என்பதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆகவே இணக்கப்பாடு மூலம் எட்டப்பட்ட விடயங்கள் இறப்பரை போல இன்னும் இழுபட்டு செல்வது விரும்பத்தக்க ஒன்றல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதுடன் புதிய சனாதிபதி தலமையிலான அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்ட இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்ட முக்கியமான  விடயங்கள் எதுவும் இதுவரை செயற்படுத்தப்படாமல் இருப்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் விடயமாகமாறியிருக்கிறது.
புதிய அரசாங்கம் பாராளமன்ற தேர்தலினை குறிவைத்து செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றதே அன்றி குறிப்பிட்டு சொல்லக் கூடியளவு புதிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பது புதிய அரசாங்கத்தின் ஆளுமையற்ற தன்மையை வெளிக்காட்டி நிற்கிறது. ஆகவே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பதுடன் பெருமளவான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முனையவேண்டும்.
சனாதிபதி திரு.மைத்திரிபாலவின் அரசால் இராணுவதளபதி சரத்பொன்சேகா மற்றும் பிரதமநீதியரசர்  சிராணி ஆகியோருடைய விடயங்கள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் பாராளமன்ற தேர்தலிற்கு பகடைகாய்களாக பயன்படுத்த கிடப்பில் போடப்பட்டுள்ளமை மிகமோசமான அரசியல் நாகரிகமற்ற செயற்பாடாக கண்டிக்கின்றோம்.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒரு தொகுதியினர் அரசாங்கத்தினை விமர்சிக்கின்ற போதும் சிலர் அமைச்சர்கள் பின்னால் ஆலவட்டத்துடன் அணிவகுப்பது வன்னி மாவட்டங்களில் கண்கூடாக காணமுடிகிறது. இவ்வாறான அந்நியோன்னிய உறவுகளை பேணுபவர்கள் ஏன் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக உள்ளனர் என்ற சந்தேகத்தினை வலுப்பெற செய்கிறது.
புதிய அரசாங்கம் பொருட்களிற்கான விலைக்குறைப்பினை பெயரளவில் மேற்கொண்ட போதும் இன்றுவரை மக்களிற்கு அந்த வசதி எட்டாக்கனியாகவே உள்ளது. கிராமங்களுக்கு கிராமம் விலைவேறுபாடு காணப்பட்டு வருகிறது. எனவே வடமாகாணசபை இதற்கான பொறிமுறை ஒன்றின் மூலம் மத்திய அரசாங்கத்தின் சலுகைகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிவகை ஒன்றினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பதுடன் ஆளுமையுள்ள தமிழ் சமூகத்தை உருவாக்க இதயசுத்தியுடன் உழைக்க அனைவரும் முன்வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply