முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து உடனடி நடவடிக்கை அவசியம்
நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் உரிய தீர்வை எதிர்பார்ப் பதாகவும் குறிப்பிட்டார். மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த காலங்களில் எமது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு அடிப்படைவாதக் குழுக்களினால் அரங்கேற்றப்பட்ட அநீதிகள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
நல்லாட்சிக்கு வித்திட்டுள்ள புதிய அரசானது இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு எமது சமூகத்துக்கான உரிய தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் 226 சம்பவங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ளன.
இனவாத செயற்பாடுகள்
எமது நாட்டில் யுத்த காலத்தை விடவும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இனவாத செயற்பாட்டை மூவின மக்களிடையே பரப்பி ஒரு சில தரப்பினர் அரசியல் இலாபம் காண்பதற்கு முயற்சித்தனர்.
இன்று எமது நாட்டில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் ஒரு சில தரப்பினர் இனவாதப் போக்கினை கையில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.
எனவே, எமது நாட்டின் மூவின மக்கள் கடும் இனவாத சக்திகளிடம் இருந்து விடுபட்டு அனைத்து மக்களும் சுதந்திரமாக வழி வகுத்திடும் ஒரு நல்லாட்சியின் கீழ் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவருகின்றனர். எனவே நல்லாட்சிக்கான புதிய அரசானது மீண்டும் இனவாத போக்கு தலைதூக்குவதற்கு எந்த தரப்பினருக்கும் இடமளிக்காது கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் எதிராகவும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்வை முன்வைக்க வேண்டும்.
பேருவளை சம்பவம்
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒரு சில அடிப்படைவாத சக்திகளினால் அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் செயற் பாடானது இறுதியாக பேருவளையில் உச்சக்கட்டமாக கட்டவிழ்த்து விடப்பட்டது.
பேருவளை வன்முறை சம்பவங்களினால் எமது முஸ்லிம் மக்கள் தமது வீடுகள் உட்பட தமது வியாபாரங்களையும் இழந்து இன்றும் நிர்க்கதியாக வீதிகளில் நிற்கின்றனர்.
முன்னைய அரசானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான் வீடுகளை அமைத்துக் கொடுத்ததைத் தவிர வன்முறையினால் தமது தொழில்களை இழந்து நிற்கும் எமது சமூகத்திற்கு இது வரையில் எந்த தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை எனவே புதிய அரசானது இதற்கான உரிய தீர்வை முன்வைப்பதோடு கடந்த காலங்களில் இவ்வாறன வன்முறைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் மூலம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
புதிய அரசின் நல்லாட்சி
புதிய அரசின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் மூவின மக்களிடையே ஒற்றுமையை எற்படுத்தி சுதந்திரமான முறையில் தத்தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். முப்பது வருட யுத்தத்தில் இருந்து விடுப்பட்டிருக்கும் நாம் யுத்தத்தில் உயிர் நீத்த எமது இரானுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால் நாட்டில் மூவின மக்களிடையே ஒற்றுமையை தொடர்ந்து பேணிவரவேண்டும். இதுவே நல்லாட்சியின் முக்கிய ஒரு செயற்பாடு. இதனை புதிய அரசு தொடர்ந்து பாது காக்கும் என்ற முழு நம் பிக்கை அனைத்து மக்களிடையேயும் காணப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply