பாகிஸ்தானில் ஜனாதிபதி அதிரடி: 6 தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் தள்ளுபடி- 2 நாளில் தூக்கில்போட நடவடிக்கை
பாகிஸ்தானில், 2008-ம் ஆண்டு முதல் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டு, அந்த உத்தரவு தொடர்ந்து 6 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி, அங்கு பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தலீபான் தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் 135 குழந்தைகள் உள்பட 148 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளை ஒடுக்கும் விதத்தில், மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவது என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்தார். இந்த முடிவுக்கு டிசம்பர் 17-ந் தேதி ஜனாதிபதி மம்னூன் உசேன் ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் அசார் என்ற பாய் கான், அப்துல் அஜீஸ், பஷீர் அகமது, முகமது பைசல், முகமது அப்சல், முனாவர் அலி ஆகிய 6 பேர் ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி மம்னூன் உசேன், அவற்றை தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் 6 பேரும் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது கருணை மனுக்கள், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து, சிந்து மாகாண அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த அமைச்சகம், 6 தீவிரவாதிகளை 2 நாளில் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களை காட்டி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவதற்கு அரசு நிர்வாகம் எடுக்கிற அனைத்து முடிவுகளுக்கும் தனது ஆதரவு உண்டு என்று ஏற்கனவே ஜனாதிபதி மம்னூன் உசேன் அறிவித்துள்ளார். மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை ஏற்பதில்லை என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply