தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர முயற்சியில் வடக்கில் பிரிவினைக்கான வெடி வெடிக்கும்
வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சரியாக சென்றிருக்குமாயின் பிரிவினைவாத ஆட்சிக்கு பலம் கிடைத்திருக்காது. தமிழ் பேசும் மக்கள் தீர்மானமே பிரிவினைக்கு துணை போய் விட்டதென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர முயற்சியில் வடக்கில் பிரிவினைக்கான வெடி வெடிக்கும் எனவும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் அதி தீவிர முயற்சியும் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகளும் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்த ஏனைய சகல மாகாணங்களினதும் தேர்தல் முடிவுகளை அவதானித்துப் பார்த்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விடவும் அதிகமாக வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியே பெற்றுள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கின் வாக்குகள்தான் ஆட்சி மாற்றத்தினை தீர்மானித்தது. வடக்கு கிழக்கின் நான்கு லட்சம் வாக்குகள் பிரிவினையினை ஏற்படுத்தும். தேசிய அரசிற்கும் துணை போய் விட்டது. இவர்களின் தீர்மானம் இவர்களை வழி நடத்தியவர்களின் தீர்மானமே இம்முறை நிலைமைகள் மாறுவதற்கு காரணம். ஆனால் இன்றும் பெரும்பான்மை மக்களின் அதிக ஆதரவு இன்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே உள்ளது. எனவே அடுத்த பொது தேர்தலில் தனித்து ஐக்கிய தேசிய கட்சியினை எதிர்த்து போட்டியிடும் போது மஹிந்த ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவார். அதற்கான முயற்சியினை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சக்திகளின் கைபொம்மையாக மாறியிருக்கும் இந்த தேசிய அரசாங்கம் இன்று அவர்களின் இறுதி இலக்கினை பிளவுபட்ட நாடு என்ற கொள்கையினை பூர்த்தி செய்து கொள்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். புலம்பெயர்ந்து அகதிகளாக வாடும் தமிழர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்துகின்றனர். ஆனால் இவர்கள் வலியுறுத்துவது இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் மட்டும் அல்ல. புலம்பெயர்ந்து பிரிவினைவாதிகளாக வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களையும் சேர்த்து இலங்கைக்கு கொண்டு வரவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.
கடந்த ஆட்சியில் நாம் வென்றெடுத்த உரிமைகளும் சுதந்திரமும் இந்த ஆட்சியில் இழக்கப்பட்டு வருகின்றது. பிரிவினைக்கான அடுத்து துப்பாக்கி சூடு வெகு விரைவில் வெடிக்கும். அதற்காகவே இந்த தேசிய அரசாங்கம் திட்டம் தீட்டுகின்றது. வட மாகாண சபையின் பிரேரணை தற்போது வடக்கில் இடம்பெற்று கொண்டிருக்கும் அரசியல் செயற்பாடுகள் அடுத்த கட்ட போராட்டத்திற்கான அறிகுறியாகவே தெரிகின்றது.
எனவே மீண்டும் இந்த நாட்டின் ஒற்றுமையினை கட்டியெழுப்ப வேண்டுமெனில் மீண்டும் சரியான தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியினை கொண்டு வர வேண்டும். இல்லையேல் இந்த நாடு பாதாளத்தினை நோக்கிய பயணத்தினை எவராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply