அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்த சதி: தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

கென்யாவில் நடத்தியது போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி செய்திருப்பதாக புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வணிக வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 21-ந் தேதி அல்கொய்தா ஆதரவு அல் சஹாப் தீவிரவாதிகள் (சோமாலியா நாட்டினர்) துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். 175 பேர் காயம் அடைந்தார்கள். இது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது மீண்டும் இதே போன்ற தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் உள்ள வணிக வளாகங்களில் நடத்துவதற்கு அதே அல் சஹாப் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த தீவிரவாதிகள் ஒரு வீடியோவை கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ 6 நிமிட படக்காட்சிகளை கொண்டுள்ளது. அதில் நைரோபி வெஸ்ட் கேட் வணிக வளாக தாக்குதலை கொண்டாடும் கிராபிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து வணிக வளாகங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள புளுமிங்டன் வணிக வளாகம், கனடாவில் உள்ள வெஸ்ட் எட்மண்டன் வணிக வளாகம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆக்ஸ்போர்டு தெரு வணிக வளாகம் ஆகியவற்றைத்தான் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

இது குறித்து மின்னசோட்டா வணிக வளாகம் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் வணிக வளாகத்தை தாக்குதல் இலக்காக கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம். அதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். நாங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது தொடர்பான சிலவற்றை பகிரங்கமாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்போம். சிலவற்றை தெரிவிக்க இயலாது” என கூறப்பட்டது.

இதே போன்று கனடாவின் வெஸ்ட் எட்மண்டன் வணிக வளாகம் தரப்பிலும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மிரட்டல் குறித்து, அரசு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிற முகமைகளுடன் இணைந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply