ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே?: கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கேள்வி

அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கிய நிலையில் ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? என்று கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்றது. 33-வது நாள் விசாரணை நேற்று தொடங்கியதும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆதித்யசோதி, மொடோ அக்ரோ மற்றும் ரிவர்வே ஆகிய நிறுவனங்களின் சொத்து பட்டியலை தாக்கல் செய்தார். அத்துடன் அவர் தனது வாதத்தை நிறைவு செய்து கொண்டார்.அதைத்தொடர்ந்து இந்தோ தோகா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் உதய்ஹொல்லா வாதிட்டார். அவர் வாதிடுகையில், ‘‘எங்கள் நிறுவனங்களில் ஜெயலலிதா முதலீடு எதுவும் செய்யவில்லை. அதுபோன்ற குற்றச்சாட்டு தவறானது. நாங்கள் ஜெயலலிதாவின் பினாமிகளும் அல்ல. நாங்கள் முறையாக வங்கியில் கடன் பெற்று நிறுவனங்களை தொடங்கினோம். அதற்குரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. எனவே, எங்கள் நிறுவனங்களின் சொத்துகளை முடக்கியது தவறானது. இந்த சொத்துகளை விடுவிக்க வேண்டும்’’ என்றார். அதைத்தொடர்ந்து நிறுவனங்களின் இறுதி வாதம் நிறைவடைந்தது.

அப்போது நீதிபதி குமாரசாமி அரசு வக்கீல் பவானிசிங்கை பார்த்து நீங்கள் வாதத்தை தொடங்குங்கள் என்று கூறினார். கால அவகாசம் வழங்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். உணவு இடைவேளைக்கு பிறகு வாதத்தை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதி குமாரசாமி, ‘‘ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோதமாக ரூ.66 கோடி சொத்து குவிப்பு குற்றச்சாட்டுக்கு உங்களிடம் ஆவணங்கள் இருக்கிறதா?’’ என்றார். வாதத்தின்போது ஆவணங்களை தாக்கல் செய்வதாக அரசு வக்கீல் பதில் அளித்தார். நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் எங்கே?’’ என்றார்.

அப்போது விசாரணை அதிகாரி சம்பந்தம், ‘‘குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளது’’ என்றார். ‘‘குற்றப்பத்திரிகை என்றால் என்ன? அதில் இருக்கும் தகவல்களை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான ஆதாரங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதி கூறினார். (அப்போது அரசு வக்கீல் பவானிசிங் அமைதியாக நின்று இருந்தார்).

அப்போது நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா வக்கீலை பார்த்து நீங்களும் வழக்கு தொடரப்பட்ட காலத்தில் உங்கள் வருமானம் மற்றும் செலவுக்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வதாக ஜெயலலிதா வக்கீல் குமார் கூறினார்.

அதைத்தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை அவர் வாசித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் சொல்லாமல் அரசு வக்கீல் அமைதியாக நின்றார். விசாரணை அதிகாரி சம்மந்தத்திடமும் நீதிபதி கேள்விகளை கேட்டார். அவரும் அமைதியாகவே நின்றார். ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்றைய விசாரணையின்போது ஜெயலலிதா உள்பட 4 பேர் தரப்பில் வக்கீல்கள் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், சுந்தர பாண்டியன், பன்னீர்செல்வம், ஜெகநாதன், முத்துக்குமார், தனஞ்செயன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply