வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னரே தேர்தல் 100 நாள் திட்டத்தை 200 நாளாக்கியாவது நிறைவேற்றுவோம் : அமைச்சர் ராஜித சேனாரத்ன
தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்புத் திருத்தம், தகவலறியும் உரிமை சட்டம் அடங்கலாக மக்களுக்கு வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறை வேற்றிய பின்னரே தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்துவதையன்றி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதே மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 100 நாள் திட்டத்தை 200 நாளாக்கியாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அடங்கலான சட்டங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடை பெற்றது. தேசிய அரசாங்கம் குறித்தும் தேர்தல் முறை மாற்றம் பற்றியும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
தேர்தல் முறையை மாற்றிய பின்னரே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். சுதந்திரக் கட்சி செயலமர்வின் போதும் இதே கருத்தே முன்வைக்கப்பட்டது. கலப்பு தேர்தல் முறையினால் சில வேளை எனக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாமல் போகலாம்.
ஆனால், தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாம் இருக்கிறோம். அடுத்த தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே அநேகமாக நடைபெறும் என்றார்.
தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சியில் உடன்பாடு காணப்படுகிறது. ஆனால் கட்சி மத்திய குழுவிலே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 100 நாட்களின் பின் தேசிய அரசாங்கம் உருவாக்கினால் அந்த அரசில் மாத்திரம் 45 அமைச்சர்களை நியமிக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாம் தேர்தலின் போது வழங்கிய சகல உறுதிகளையும் நிறைவேற்றுவோம். தேர்தலை விட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியே முக்கியமானது. தகவலறியும் உரிமை, கணக்காய்வு சட்ட மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை ஜனாதிபதி அதிகாரம் குறைப்பு என சகல உறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
100 நாள் தாமதமானதென்று மக்கள் எதிர்க்கமாட்டார்கள். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலே மக்கள் எதிர்ப்பார்கள்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகள் பலவும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply