தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ வழி செய்யுங்கள்: இலங்கை நாடாளுமன்றத்தில் மோடி வலியுறுத்தல்
இலங்கையில் தமிழர்கள் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ வழி செய்யுங்கள் என அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக இலங்கைச் சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தினார். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோருக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய 4-ஆவது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
அவர் பேசியதாவது:
இலங்கை இந்தியாவுக்கு அண்டை நாடு என்று கூறினால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இந்தியாவின் உறவு நாடாகவே இலங்கையை நான் பார்க்கிறேன்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவழி பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான உணர்வுகளாலும், கலாசாரத்தாலும் நாம் ஒன்றுபடுகிறோம்.
ஒருமைப்பாடும், மத நல்லிணக்கமுமே இந்தியாவின் பலமாகும். அதே சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கை கட்டமைக்கப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதிபர் தேர்தலின் மூலம் ஜனநாயகத்தின் பெருமையை இலங்கை மக்கள் உலகுக்கே உரக்கக் கூறியுள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டை தீர்மானிக்கப் போவது இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்காக, நாம் (இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள்) நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக இந்தியாவும், இலங்கையும் விளங்குகின்றன. எனவே, இந்த இரு நாடுகளிடையே கடல்சார் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் முக்கியமானதாக இந்தியா கருதுகிறது.
நமது இரு நாடுகளும் இணைந்து இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு உறவை பலப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் பயங்கரவாதத்தையும், எல்லை தாண்டிய அத்துமீறல்களையும் நாம் எதிர்கொள்ள முடியும். இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டு வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்தியாவில் தற்போது ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் ஒரு பகுதியாகவே, இந்தியா-இலங்கை இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.9,600 கோடி வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. அதே போல், மற்ற துறைகளின் வளர்ச்சிகளுக்காக ரூ.1,900 கோடியையும் இந்தியா வழங்கவுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: இலங்கையிலிருந்து தமிழ் ஈழம் கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுடனான போரில் தங்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வுகளால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் நலன் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். தமிழர்கள் கண்ணியத்துடனும், அமைதியுடனும் வாழ வழி செய்யுங்கள். அவர்களது வாழ்க்கைத்தரம் நல்லிணக்கத்துடன் மேம்படுவதைக் காணவே இந்தியா விரும்புகிறது.
இலங்கை அரசமைப்பில் 13-வது சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருவதன் மூலம் இந்தக் கூற்று நிஜமாகும் என நம்புகிறேன் என்றார் நரேந்திர மோடி.
சிறப்பான வரவேற்பு
இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு கடற்படையினர் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கான தனது ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை கடந்த 9-ஆம் தேதி தொடங்கினார்.
அதன்படி செஷல்ஸ், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட அவர், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.
இதன் பின்னர், கொழும்பு விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக இலங்கை அதிபர் மாளிகைக்கு மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினர் மோடிக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு முறை வரவேற்பு அளித்தனர். பின்னர், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply