19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் குறைப்பு உள்ளிட்ட சில சரத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 19ஆவது திருத்தச்சட்டத்தின் உத் தேசவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு அரச அச்சகத்திற்கு அமைச்சரவை அறிவித்துள்ளது. அத்துடன் தகவலறியும் சட்டமூலத்தை சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தேர் தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர் பில் அமைச்சரவையில் இணக்கம் காணப்படவில்லை என தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டிசில்வா, முன்னாள் அமைச்சர்களான அநுரபிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாயணக்கார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில்பங்கேற்றிருக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு சில சரத்துக்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. பாராளுமன்றம் நிறுவப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. புதிய திருத்தங்களின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் நிறைவுறும் வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு சட்டத் திருத்தங்களில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி படைகளின் சேனாதிபதி, அமைச்சரவையின் பொறுப்பாளர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரங்கள் என்பன தொடர்ந்தும் அமுலிலேயே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமையானது அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. ஜனநாயக சமூகம் ஒன்றின் நீடிப்புக்காக தாக்கம் செலுத்தும் தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, மக்கள் பாதுகாப்பு, குற்றங்களை தடுத்தல் சுகாதார பாதுகாப்பு, ஏனையவர்களின் உரிமைகளை பாதுகாத்தல்,தனிப்பட்ட தன்மையை பாதுகாத்தல்இ இரகசியமாக பெரும் தகவல்கள் வெ ளியிடப்படுவதை தடுத்தல்இ நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்தல், ஆகியவற்றை தவிர்த்தல் ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்ற சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
அதேநேரம் குறித்த 19ஆவது திருத்தச்சட்ட வரைவானது அவசர சட்ட மூலமாக பாராளுமன்றில் சமர்பிக்கப்படமாட்டாது எனவும் வர்த்தமான அறிவித்தலைத் தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றுக்கு சட்ட வியாக்கியாணத்தைக் கோருவதற்காக அனுப்பிவைக்கப்படும். அதனைத்தொடர்ந்து சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
62 பக்கங்களைக் கொண்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை இடமபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான சட்டமூலத்தை வாசித்து ஆராய்வதற்கு காலஅவகாசம் அவசியம் என சில அமைச்சர்கள் அறிவித்திருந்தனர் இதனால் அவ் அமைச்சரவை அமர்வின் போது 19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டிற்கு வரக் கூடிய சாத்தியம் ஏற்படவில்லை.
அவ்வாறிருக்கையில் நேற்யைதினம் நடைபெற்ற கூட்டத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பில் இணக்கபாடு எட்டப்பட்டிருக்கவில்லை. இதனால் இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கட்சிகள் கலந்துரையாடவிருப்பதாக தெரியவருகின்றது. குறிப்பாக தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் நாளையதினம் செவ்வாய்கிழமை மீண்டும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டமூலம் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்களை ஏற்படுத்தும் சட்டமூலம் ஆகிய இரண்டையும் ஒன்றாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கும் சுதந்திரக் கட்சி இன்றைய தினம் அவ்விடயம் தொடர்ந்து கலந்துரையாடவுள்ளதாக தெரியவருவதுடன் இதன்போது தேர்தல் முறைமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நகல் வரைபு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்தவாரம் இடம் பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டத்திலும் இந்த நகல்வரைபுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply