மஹிந்த – மோடி சந்திப்பு துரோகம் என்றால் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுத்ததும் துரோகம்!
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபக்ஷம், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன.பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆதரவைப் பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். மோடி மதத்தின் பேராலும் ராஜபக்ஷ இனத்தின் பேராலும் அதைச் செய்கின்றனர். ராஜபக்ஷ அண்மையில் அளித்த பேட்டியில், தனது தேர்தல் தோல்விக்கு இந்திய “ரா´ உளவுப் பிரிவுதான் முழுக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பைக் கண்காணித்து உறுதி செய்யும் உளவுத் துறையையே ராஜபக்ஷ களங்கப்படுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து யாரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபம் தெரிவிக்கவோ இல்லை. ராஜபக்ஷவை எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம்?
நரேந்திர மோடியும், ராஜபக்ஷவும் நெருக்கமான நண்பர்கள் என்பதுதான் காரணமா? இதை விட இந்தியாவுக்கு தலைகுனிவும், அவமானமும் வேறு இருக்க முடியாது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவை தோற்கடித்தது அங்கு வாழும் 25 லட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள்தான். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்ஷவை நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்ததுதான் துரோகம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இலங்கைப் பயணத்தின்போது ராஜபக்ஷவை – பிரதமர் நரேந்திரமோடி சந்தித்ததை தமிழர்களுக்குச் செய்த துரோகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்ததுதான் துரோகம் ஆகும். நரேந்திரமோடியின் இலங்கை வருகையால், அங்குள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் நம்பிக்கை துளிர் விட்டும் உள்ளனர். தற்போது நல்ல திட்டங்களுக்கு வழிகோலப்படுகின்றன. இதனை இளங்கோவன் ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply