ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் இளவரசர் ஹாரி

பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹாரி வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்த பின்பு, கடந்த 10 ஆண்டுகளில் சவால் மிக்க பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது. ஆப்கானிஸ்தானில் இரு முறை சண்டையிடச் சென்றேன். எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களை அப்போது பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் கேப்டன் ஹாரி வேல்ஸ் என்று அறியப்படும் இளவரசர் ஹாரி (30), 2005-ஆம் ஆண்டில் அதிகாரிப் பயிற்சி வீரராகச் சேர்ந்தார். 2006-ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டார்.

ராணுவத்தின் விமானப் பிரிவில் சேருவதற்காக 2009-இல் பயிற்சி மேற்கொண்டார். 2012-ஆம் ஆண்டில் போர்க்கள ஹெலிகாப்டர் விமானியாகச் செயல்படத் தொடங்கினார். அதே ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.

தற்போது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் ராணுவத்தினருடன் இணைந்து நான்கு வாரங்கள் பணியாற்றுவார். ஜூன் மாதம் ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply