இலங்கையில் தேசிய கீதத்தை தமிழில் பாடலாம் :ஜனாதிபதி மைத்திரிபால
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் வடிவமைக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் அவரவர் அதனைப் பாடி வந்துள்ளனர்.
இருந்தபோதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள், தேசிய கீதத்தில் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்காத ஒரு போக்கு தொடர்ந்து நிலவுகின்றது.
இன ரீதியாகத் தாங்கள் ஒடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த உணர்வுக்கு அவர்கள் ஆளாகியிருந்ததாகப் பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என புதிய ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply