புலம்பெயர் சமூகத்தை புறக்கணித்து செயற்பட முடியாது; அவர்களையும் இணைக்க வேண்டும் : ஜீ.எஸ்.பீரிஸ்
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் எனும் செயற்திட்டத்தை முன்னெடுத்தலின் போது புலம்பெயர் சமூகத்தை புறக்கணித்துச் செயற்பட முடியாது. அவர்களும் இணைத்துக்கொள்ளப்படுதல் அவசியமாகும். எனினும் அரசியல் ரீதியிலான சில காரணங்களாலேயே சில அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டன. என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் அந்நாட்டுக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவ்வாணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
பேராசிரியர் பீரிஸ் இங்கு மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது அந்த சபையினது இணை நிறுவனங்களையோ நாம் எதிர்க்கவில்லை. அத்துடன் அவற்றோடு இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் நாம் கூறவில்லை. இருந்த போதும் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளையே நாம் வெறுக்கின்றோம். இதனடிப்படையில் வருகின்ற இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளை நாம் எதிர்க்கின்றோம். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
சர்வதேச மனித உரிமைகள் பேரவையினது ஆணையாளர் அல் ஹுசெய்னுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது பாராட்டுக்குரிய விடயமாகும். எமது ஆட்சிக்
காலத்தின் போதும் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகைதந்தார் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு என்றும் தயாராகவே இருக்கின்றேன்.தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அனுபவங்களை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றது. இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் அந்த நாட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே நாம் அவ்வாணைக்குழுவின் நல்ல விடயங்களை மாத்திரம் உள் வாங்கிக்கொள்ள முடியுமே தவிர அதன் அனைத்துச் செயற்பாடுகளையும் உள் வாங்க வேண்டும் என்பதில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply