ராமானுஜர் வாழ்க்கை தொலைக்காட்சி தொடராகிறது கருணாநிதி வசனத்தில்

வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் ,11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் திருபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும் விஷிஷ்டாத்வைதவாதியுமான ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, தொடராக வெளிவரவிருக்கிறது. இந்தத் தொடரின் கதை திரைக்கதை – வசனத்தை எழுதியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

நாத்திகராகக் கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி, ஒரு சமய சீர்திருத்தவாதியின் வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதுவது குறித்து இணையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை எழுப்பியிருக்கும் நிலையில், இது குறித்து விளக்கமொன்றையும் கருணாநிதி அளித்திருக்கிறார்.

‘பகுத்தறிவுக்கு எதிரானதல்ல’

“இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும், கிருபானந்த வாரியாரையும், மதுரை ஆதினத்தையும் – அவர்கள் எல்லாம் சிறந்த ஆன்மீகவாதிகள் என்ற போதிலும், அவர்களின் தமிழுக்காகவும், சாதி மதப் புரட்சிகளுக்காகவும் நாம் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்து வைத்தேன். எனவே “இராமானுஜரின்” வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை” என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

ராமானுஜர் குறித்த தொடரை எடுப்பதற்கான யோசனையைத் தந்தவரே அவர்தான் என்கிறார் தொடரின் இயக்குனரும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி. ராமானுஜரைப் பற்றிய வரலாற்று நூல்களில் இருப்பதைப் போன்றே தொடரை எடுக்க வேண்டுமென கருணாநிதி கூறியதாகவும் கூறுகிறார் குட்டி பத்மினி.

கருணாநிதியின் இந்த முயற்சியை பகுத்தறிவு இயக்கத்திற்கு எதிரானதாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.

“ஆன்மீகத்தை நாடுகிறாரா கருணாநிதி?”

ராமானுஜரைப் பற்றி நூல்களை எழுதியவரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியிடம் இந்தத் தொடருக்கு வாழ்த்தைப் பெறும்படி கருணாநிதி கூறியிருக்கிறார்.

அந்தக் காலத்திலேயே ஒருவர் இவ்வளவு சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கிறாரே என்பதால் கருணாநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

கருணாநிதி ஆன்மீகத்தை நாடுகிறாரோ என்றும் தனக்குத் தோன்றுவதாகச் சொல்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்திலும் ராமானுஜர் படத்தை பதிவுசெய்து, தன்னுடைய கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். இந்தத் தொடர் வரும் மே மாதத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply