“ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்’
ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: உக்ரைன் அமைதி குறித்து, பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்கில் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, ரஷியா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் தொலைபேசி வழியாக புதன்கிழமை பேச்சு நடத்தினர்.
அப்போது, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, அனைத்து ஆயுதங்களையும் எல்லைப்புறத்திலிருந்து நீக்குவது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷிய நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அரசியல் ரீதியான பேச்சு நடத்தி, சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்து, நீடித்த அமைதி நிலவச் செய்ய வேண்டும் என்று இது தலைவர்களும் வலியுறுத்தினர் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சிப் படையினர், அந்நாட்டு ராணுவத்துடன் கடந்த ஆண்டு முதல் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கிளர்ச்சிப் படையினருக்கு ரஷியா ஆயுத உதவி அளித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை, கிளர்ச்சியாளர்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தங்களது பகுதிகள் உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர்.
மரியுபோல் துறைமுக நகரத்தைக் கைப்பற்றவும் கிளர்ச்சியாளர்கள் கடுமையாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்கில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கிளர்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். போர் நிறுத்தம் குறித்து அப்போது உடன்படிக்கை ஏற்பட்டபோதிலும், அடுத்த சில நாள்களிலேயே சண்டை மீண்டும் உக்கிரமடைந்தது.
கிழக்கு உக்ரைன் பகுதியில், கிட்டத்தட்ட 11 மாதங்களாக நடைபெற்ற சண்டையில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ஐ.நா. தெரிவித்தது.
இந்த நிலையில், போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் மீண்டும் முயற்சியெடுத்தன. பிரான்ஸ், ஜெர்மனி முன்னிலையில் ரஷியா – உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரியில் ஏற்பட்டது.
மின்ஸ்கில் இந்த போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது. கிளர்ச்சியாளர்கள் இந்த உடன்படிக்கையை ஏற்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் கீழ் பிப்ரவரி 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமைதி உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஆங்காங்கே சிறு மோதல்கள் நடைபெற்றபோதிலும், இந்த முறை பெரும்பாலும் கிழக்கு உக்ரைனில் அமைதி திரும்பியது எனக் கூறுமளவுக்கு நிலைமை மாறியது.
முன்னதாக, கிரீமியா பகுதி ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷிய ராணுவத்தின் கன ரக தளவாடங்கள் உள்ளிட்ட உதவிகள் மறைமுகமாக வழங்கப்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களைத் தொடர்ந்து, ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதித்தன.
தற்போது, மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷியா அளித்த அனைத்து உறுதிகளையும் கடைப்பிடித்தால்தான் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply