ஏமன் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்: பலி 77 ஆக உயர்வு-ரத்தம் கிடைக்காமல் டாக்டர்கள் தவிப்பு
ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான மக்கள் பிரார்த்தனைக்காக வந்திருந்தனர். அப்போது அல்-பத்ர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு மசூதிகளில் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.இதனால் மசூதி வளாகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடந்தன. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட காப்பாற்றும்படி கதறித் துடித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
3 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய பலர் இறந்தனர்.
மாலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதனை உறுதி செய்த சுகாதாரத்துறை அதிகாரி, மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் இருப்பதாக கூறினார். இதனால், பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு செலுத்துவதற்கு தேவையான அளவுக்கு ரத்தம் இருப்பு இல்லாததால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரத்ததானம் செய்ய விரும்புவோர் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வரும்படி அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply