நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மைத்திரியும் தயக்கம்?

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முன்வரைவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்கு வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதியின் தவணைக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு வரையறுப்பது, பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது மற்றும் நாடாளுமன்றம் நாலரை ஆண்டுகளில் தானாக விரும்பிக் கோராத பட்சத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கமுடியாது ஆகியன உள்ளிட்ட அதிகாரக் குறைப்புகள் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான வரைவில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே, ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குக் கொண்டுவரப்பட முடியும் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.

ஜனாதிபதி வசமிருந்த பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அந்த அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களிடம் கைமாற்றவும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ந்தும் நாட்டின் நிறைவேற்றுத் தலைவராக ஜனாதிபதியே இருப்பார் என்றும் அவரே அரசாங்கத்துக்கும் தலைவர் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.

ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அந்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு சொல்லுகின்ற அமைச்சரவை ஆட்சிமுறையை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்த மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெற்ற பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டதாக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கமுடியாது என்று பிரசாரம் செய்துவந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக மாறியிருப்பதே அவரது தயக்கங்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply