சிங்கள பௌத்த நாட்டில் தமிழில் தேசிய கீதம் எதற்கு
சிங்கள பௌத்த நாட்டில் எதற்காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும்? 8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கூட தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று தமிழில் தேசிய கீதம் கேட்பவர்கள் நாளை தமிழ் தேசத்தினை கேட்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கையின் அரசியல் அமைப்பினுள் அரச கரும நிகழ்வுகளில் தமிழ்மொழி மூலம் தேசிய கீதத்தினை இசைப்பது அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் தற்போது தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடப்படவேண்டுமென்று புதிய கருத்தினை முன்வைத்து வருகின்றனர். நாம் கேட்பது என்னவெனின் பௌத்த சிங்கள நாட்டில் எதற்காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பதாகும். இங்கு பௌத்த கொள்கைகளையும் உரிமைகளையும் மதிக்கவேண்டும்.
எமது அயல் நாடான இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. தமிழ் நாட்டின் 8 கோடிப்பேர் வாழ்கின்றனர். அதேபோல் வெவ்வேறு மொழிபேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனாலும் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் எந்த நிகழ்வானாலும் அங்கு ஒரு மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும். இந்தியாவில் அவ்வாறானதொரு நிலைமை இருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவேண்டும். இலங்கையில் எப்போதும் ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மேலும் இன்று தமிழ்மொழி மூலம் தேசிய கீதம் பாடவேண்டும் என கேட்கும் தமிழ் பிரிவினைவாதிகள் நாளை தமிழ் தேசத்தினையே கேட்பார்கள். எனவே இச்செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.
அதேபோல் அண்மையில் சிகிரியாவில் புராதான சின்னங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தமிழ் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம். தமிழ் சிறுமிக்கு சிங்கள பாஷையை வாசிக்க கடினமாக இருந்திருக்கலாம். அதேபோல் யுவதியின் குடும்பம் மிகவும் வறுமையானது.இவ்வாறானதொரு நிலைமையில் அப்பாவி யுவதியை கைது செய்வது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயற்பாடாகும். இவ்வாறான தவறுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் இவை சிங்கள மக்களின் சொத்துக்கள் மட்டுமல்ல இது தமிழ், முஸ்லிம் மக்களினதும் உரிமைகள், எனவே அதை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
எனினும் ஒரு யுவதியை கைது செய்து சிறையில் அடைப்பது கண்டிக்கத்தக்க விடயம். எனவே உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யுவதியை விடுதலை செய்து சமூகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply