இலங்கை ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல ・ பொன். செல்வராசா

இலங்கை ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடு அல்ல. பல இன மக்கள் இங்கு வாழ்கின்றனர். இந்த இனங்களுக்குள் இன ரீதியாகவும் சமூக பொருளாதார வாழ்வியல் ரீதியாகவும் பல போட்டிகள் இருக்கின்றன.  இதில் நாமும் பங்கு கொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம். இவ்வாறு போட்டி போடுவதற்கு நாமும் அவர்களைப்போல சம பலம் கொண்டவர்களாக  மாற வேண்டும். நாம் சமபலம்  பெறுவதற்கு  இங்கு பல தடைகள் இருக்கின்றன.  அத்தடைகளை தகர்த்தெறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம்  என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இருட்டுச்சோலை விஷ்ணு வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

எமது மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் நாம் கல்வி நிலையில் பாரிய பின்னடைவில் சென்று கொண்டிருக்கின்றோம்.

எமது இனம்  கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் சிக்குண்டு தவித்த இனம். உயிர் உடமை வாழ்வாதாரம் உறவுகள் என சகலவற்றையும் இழந்தோம்.  இவ்வாறான இழப்புக்களால் பல குடும்பங்களில் சிறுவர்களே குடும்ப பொறுப்புக்களை ஏற்க நேரிட்டது. இதனால்  இச்சிறுவர்களுக்கு பாடசாலை  வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த நாடு ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல. பல இன மக்கள் இருக்கின்றார்கள். இந்த இனங்களுக்குள் இன ரீதியாகவும் சமூக பொருளாதார வாழ்வியல் ரீதியாகவும்  போட்டிகள் இருக்கின்றன.  இதில் நாமும் பங்கு கொள்ள வேண்டிய பங்காளிகளாக இருக்கின்றோம்.  இவ்வாறு போட்டி போடுவதற்கு நாமும் அவர்களைப் போல் சம பலம் கொண்டவர்களாக மாற வேண்டும். நாம் சம பலம்  பெறுவதற்கு இங்கு பல தடைகள் இருக்கின்றன. அத்தடைகளை நாம் தகர்த்தெறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே நாம் போட்டியுடைய ஒரு நாட்டில் வாழ்கின்றோம். கடந்த காலங்களில் இழந்தவற்றை ஈடேற்ற  வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கின்றோம். இவற்றை பெற நாம் இன்னும் வீறு நடைபோட வேண்டியவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் நாம் மற்றவர்களுடன் போட்டி போடுவதற்குரிய சம பலத்தினை பெற முடியும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நாம் அத்தனை நடவடிக்கைகளிலும் புறக்கணிக்கப்பட்டோம். தட்டிக்கேட்டும் பலன் இல்லை. அவற்றுக்கு பதிலும்  இல்லை என்ற நிலையில் தான் எமக்கான காலம் வரும் வரை காத்திருந்தோம். அதற்கான காலமும்  வந்தது. எம்மை புறக்கணித்தவர்களை நாமும் புறக்கணித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

எனவே இப்போது வந்திருக்கும் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி எமது இனம் சுதந்திரத்திற்கு முன்னர் எவ்வாறாக முன்னேற்ற நிலையில் இருந்தோமோ அவ்வாறான நிலையை மீண்டும்  தோற்றுவிக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply