உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விற்பனை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே உறவினர் மீது விசாரணை
உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததில் தொடர்பு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில், ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர் மீது சிறிசேனா அரசு முழுமையான விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர், உதயங்கா வீரதுங்கா. இவர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் ‘இலங்கை உணவு விடுதி’ நடத்தி வந்தார்.
அவரை ராஜபக்சே தனது பதவிக்காலத்தில், ரஷியாவுக்கான இலங்கை தூதராக நியமித்தார். அவர் சாதனை அளவாக 9 ஆண்டு காலம் மாஸ்கோவில் இலங்கை தூதராக பணியாற்றி வந்தார்.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து உதயங்கா வீரதுங்காவுக்கும் சரிவு ஏற்பட்டது. சிறிசேனா அரசு அவரையும், அவரைப் போன்று அரசியல் ரீதியில் வெளிநாடுகளில் பணியில் நியமிக்கப்பட்டவர்களையும் இலங்கை திரும்புமாறு அதிரடியாக உத்தரவிட்டது.
ஆனால் உதயங்கா வீரதுங்கா, நாடு திரும்பவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்றும் தகவல் ஏதும் இல்லை.
அவர் மாஸ்கோவில் ரஷிய தூதராக பதவி வகித்த காலத்தில், இலங்கைக்கான ஆயுத கொள்முதலில் நிறைய தொடர்பு வைத்திருந்தார் என தெரிய வந்துள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படைக்கான ‘மிக்௨7’ ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்ததும் அடங்கும்.
இப்போது இது குறித்து இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.
மேலும், உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை (விற்பனை) செய்ததில், இவருக்கு தொடர்பு உண்டு என்று புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உக்ரைன் அரசு முறைப்படி புகார் செய்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீரா நேற்று கருத்து தெரிவிக்கையில், “இந்த விவகாரத்தில் நாங்கள் முழுமையான விசாரணை நடத்துவோம்” என அறிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply