செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்

நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை 4 பேர் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் அடங்குவர்.

செவ்வாய் கிரகத்துக்கு முதலாவதாக 4 பேரை வருகிற 2024–ம் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்புவதில் 2 ஆண்டுகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026–ம் ஆண்டு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் 2027–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவார்கள்.

பயண தாமதத்துக்கு பண முதலீடு பற்றாக்குறையே முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான பணியும் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாஸ் லேண்ட்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆள் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் பணி 2018–ம் ஆண்டு தொடங்குவதாக இருந்தது. தற்போது அதுவும் 2 ஆண்டு காலதாமதப்படுத்தப்பட்டு 2020–ம் ஆண்டு தொடங்குகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply