ரூ. 1500 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் துறைமுகத்தினுள் சிக்கின: ஐவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்வதாகக் கூறி ஐந்து கொள்கலன்களில் டுபாயிலிருந்து சட்ட விரோதமாக கொண்டு வந்த பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
சீனி இறக்குமதிக்காக அரசு வழங்கும் வரிச்சலுகையை பயன்படுத்தி சுமார் 1500 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள், சீட்டுக்கட்டுகள் (கார்ட்ஸ்), இலக்ரோனிக் உதிரிப்பாகங்கள், விலையுயர்ந்த சப்பாத்துக்கள் போன்றவை ஐந்து கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சீனி இறக்குமதிக்கு அரசு வரிச்சலுகை அளிப்பதுடன் துறைமுகத்திலிருந்து விரைவாகக் கொள்கலன்களை அப் புறப்படுத்துவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சலுகைகளை பயன்படுத்தி டுபாயிலிருந்து மேற்படி பொருட்களை இந்தியா ஊடாக இறக்குமதி செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையிலுள்ள ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக உதவி சுங்கப் பணிப்பாளர் மாலிபியசேன தெரிவித்தார்.
50 கிலோ எடை கொண்ட 2600 மூடை (13 லட்சம் கிலோ) களை இறக்குமதி செய்வதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனியின் பெறுமதிக்கான 60 லட்சத்து 40 ஆயிரத்து 630 ரூபாவையும் அதற்கான வரியாக 20 லட்சத்து 82 ஆயிரம் ரூபாவையும் மேற்படி நபர்கள் செலுத்தியிருந்ததுடன் வரிச் சலுகையாக வழங்கப்படும் 7 லட்சத்து 98 ஆயிரத்து 175 ரூபாவையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர் என உதவி சுங்கப் பணிப்பாளர் மாலிபியசேன தெரிவித்தார். சீனிக்குப் பதிலாக நான்கு கோடியே 50 இலட்சம் சிகரட்டுகள் 25,000 விளையாட்டுகளுக்கு பயன்படுத்தும் சப்பாத்து சோடிகள் மூன்று லட்சம் சீட்டுக்கட்டுகள் (கார்ட்ஸ்) என்பனவும் கொள்கலன்களில் இருந்தன.
சீனி கொள்கலன்கள் இறக்கி வைக்கப்படும் பகுதிக்கு கொள்கலன்களை கொண்டு செல்லுமாறு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தபோதும் நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே கொள்கலன்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே சந்தேகம் வலுத்தது என உதவி சுங்க பணிப்பாளர் மாலிபியசேன தெரிவித்ததுடன் துறைமுகத்தினுள்ளேயே மேற்படி ஐந்து பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.
சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத் குணதிலக்க, பணிப்பாளர் நெவில் குணரட்ன, திலக் பெரேரா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சுங்க அதிகாரிகளான கே. ஏ. தர்மசேன, யூ. லியனகே, லாலித வீரசிங்க, பீ. பி. குலதுங்க, எம். பொடிரட்ண, சனத் பர்னாண்டோ, நரேந்திர பர்னாண்டோ மற்றும் அரவிபொல, நுவன்குணரட்ன ஆகியோரின் குழுவினரே மேற்படி சுற்றிவளைப்புகளை நடத்தினர் என உதவி சுங்க பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply