எதிர்க்கட்சித் தலைவர் யார்? சபையில் கடும் சர்ச்சை
வெற்றிலை சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் யானைச்சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கின்ற நிலையில் இந்நாட்டின் எதிர்க்கட்சி எது என்றும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.சபாநாயகரிடம் நாடு ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாராளு மன்றமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி.யும்,ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமைகளையும் சம்பிரதாயங்களையும் கவனத்திற் கொண்டு இந்நாட்டையும் பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை நியாயமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதேபோன்று ஜனநாயக தேசியக்கூட்டணியின் மாற்றுக்குழு உறுப்பினரான அஜித்குமார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தினேஸ்குணவர்த்தன, விமல்வீரவன்ச, அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகிய உறுப்பினர்களும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை ஆழமாக பரிசீலித்து அறிவிக்குமாறும் சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷவிடம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் சரியான தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் சிங்கப்பூரின் தேச பிதா என வர்ணிக்கப்படும் அந்நாட்டின் 30 வருட கால பிரதமர் அமரர் லீகுவான் யூவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய அனுரகுமார திசாநாயக்க எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான சர்ச்சையை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில்,
நாம் பிரதி நிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் இப்பாராளுமன்றம் செயற்படுவதற்கான நெறி முறை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று நிலையியல் கட்டளைகளும் இருக்கின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலும் மேற்படி நெறிமுறைகளிலும் நிலையியற் கட்டளைகளிலும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு முதல் 83 ஆம் ஆண்டு வரையில் ஆறு வருடங்களாக அப்பாத்துரை அமிர்தலிங்கம் தனது 18 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்துள்ளார். 1983 முதல் 1988 காலப்பகுதியில் அமரர் அனுர பண்டாரநாயக்க 8 உறுப்பினர்களுடனும் அதன் பின்னர் 1989முதல் 1994 ஆம் ஆண்டு காலம் வரையில் 67 உறுப்பினர்களுடன் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் 1994 ஆம் ஆண்டின் சில காலத்திற்கு காமினி திசாநாயக்கவும் அதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர்.
இதன் பின் சில காலத்துக்கு முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அதேவேளை 2015 இன் முற்பகுதி வரையில் இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார்.
அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்த சமயத்தில் அக்கட்சியிலிருந்து பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டனர். எனினும் அவ்வாறு அரசுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நிலைமை இவ்வாறு இருக்கையில் இன்றைய பாராளுமன்றத்தில் நடந்திருப்பது என்ன? எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் இன்று அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக இருக்கின்றனர். சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் இருப்போர் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கின்றனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் போது அதேகட்சியைச் சேர்த்த ஒருவர் எதிர்க்கட்சித்தலைவராக இருக்க முடியுமா? அத்துடன் அக்கட்சியினால் எதிர்க்கட்சியாக செயற்பட முடியுமா?
இது எமது நாட்டின் ஜனநாயகத்துக்கும் அதேநேரம் பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்துக்கும் முரணானதாகும். இந்த பாராளுமன்றத்தை கேலிக்குட்படுத்தி விளையாட்டு வீடாக மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும் சம்பிரதாயத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கிறது என்பதால் இவ்விடயத்தில் சரியானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
சபாநாயகரிடம் இந்நாடு ஒப்படைக்கப்படவில்லை. பாராளுமன்றம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே பாராளுமன்றத்தின் கெளரவத்தை சபாநாயகர் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தினேஸ்
இதனையடுத்து தினேஷ் குணவர்தன கூறுகையில் உலகின் கேலிக் கூத்தான பாராளுமன்றமாக இலங்கை பாராளுமன்றத்தை மாற்ற முனைவது பயங்கரமான எதிர்விளைவுகளையும் மக்கள் திசை திரும்பும் நிலைமை ஏற்படும்.
சுதந்திர கட்சியினர் பெரும்பாலானோர் அரசில்அமைச்சர் பதவிகளை வகிக்கையில் எப்படி அக்கட்சியை சேர்ந்தவர் எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்றத்தில் செயல்பட முடியும்.
பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் முறைமை தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.எனவே பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை பாதுகாப்பதற்கும் மக்களின் ஆணை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி முக்கியமானது. ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என இரண்டு பிரிவுகள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அதுவே சம்பிரதாயம்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்க்கட்சியை சேர்ந்த பெரும்பாலானோர் அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது.
எனவே பாராளுமன்றத்தின் முக்கிய பதவியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேலிக்கூத்தாக்க வேண்டாம்.உலகின் கேலிக்கூத்தான பாராளுமன்றமாக மாற்ற வேண்டாம்.
எனவே சபாநாயகர் இது தொடர்பில் அவதானத்துடன் கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டுமென்றும் தினேஷ் குணவர்தன எம். பி. தெரிவித்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் காலி மாவட்ட எம். பி. அஜித்குமார் ஆகியோரும் மேற்கண்டவாறே கருத்துக்களை முன்வைத்தனர்.
பிரதமர்
இதனையடுத்து எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில் நான் எதிர்க்கட்சித் தலைவராக 11 வருடங்கள் இருந்தேன். அப்போது இப்படியான பிரச்சினைகள் எதுவும் எழவில்லையே என்று நகைச்சுவையாக கூறியதுடன் தேசிய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் என்ற ரீதியில் இங்கிலாந்தின் 1015ஆண்டு கால பாராளுமன்ற வரலாறுகளை உதாரணப்படுத்தி பேசினார். அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சித் தலைவரை நியமித்தல் என்பது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல. இதனை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும்.
எப்படி இருப்பினும் பாராளுமன்றத்திற்கென்று சம்பிரதாயம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினைகளையும் நிலைமைகளையும் ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும்.
இன்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூகமளித்திருக்கவில்லை என்பதால் அவர்களையும் இணைத்துக் கொண்டு பேச்சுக்களின் மூலம் முடிவுக்கு வரவேண்டும்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பொன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கிறது. எனவே இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சுசில்
இதனையடுத்து எழுந்த முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 138 உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 120 பேர் அதில் அடங்குகின்றனர்.
இந்நிலையில் 26 பேரே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். அப்படியானால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்னும் 112 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் சபாநாயகர் சரியான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.
அனுர பிரியதர்ஷன
இதன்போது கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறுகையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் இங்கு கேள்வியெழுப்புவோர் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர். அப்படியானால் தேசிய நிறைவேற்று சபை தொடர்பிலும் இங்கு கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என்றார்.
சபாநாயகர்
இதனையடுத்து பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply