வன்னியில் இடம்ப்பெயர்ந்த மக்களின் நிவாரணம் பற்றி அரச அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா வழங்கும் 800 மெற்றிக் தொன் நிவாரணப் பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கிலேயே அரசாங்க அதிபர்களிடம் விபரங்கள் கோரப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தியா இலங்கைக்கு வழங்கவிருக்கும் நிவாரணப் பொருள்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவையான நிவாரணப் பொருள்கள் பற்றிய விபரங்களைக் கூடிய விரைவில் பூர்த்தி செய்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் கையளிக்குமாறு அரசாங்க அதிபர்களுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.சீ.எம்.ராசிக் தெரிவித்துள்ளார்.

பின்னர், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அந்தப் பட்டியல்களை இந்திய உயர்ஸ்தானகரிடம் வழங்குவார் எனவும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் எனவும் ராசிக் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

 வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு டிசம்பர் மாதம் வரை தேவையான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்தின் அடுத்த கட்ட உணவுப் பொருள் தொகுதி வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை இந்த உணவுப் பொருள் தொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் 230,000 பேருக்குத் தேவையான 438 மெற்றிக் தொன் நிவாரணப் பொருள்கள் 29 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply