ஜனாதிபதியின் சகோதரரை தாக்கிய சந்தேக நபருக்கு ஏப்.08 வரை விளக்கமறியல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரரை கோடரியால் தாக்கிய சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் ஏப்ரல் 8வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தலையின் பின்பகுதியில் கோடரியால் வெட்டப்பட்ட பிரியந்த சிறிசேன கொழும்பிலுள்ள தனியார் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு இவரின் நிலைமை மோசமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.பொலன்னறுவை, ஹதர எல்ல பகுதியில் வைத்து நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

மறைந்திருந்த சந்தேக நபர் பிரியந்த சிறிசேன மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சந்தேக நபர், பிரியந்தவின் நண்பர் எனவும் தனிப்பட்ட காரணத்தினாலே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. தனது பெற்றோரை ஏசி தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளதாக அறிய வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்தார்.

தாக்குதலையடுத்து பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த சிரிசேன பின்னர் கொழும்பு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழு விசாரணை நடத்துகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply