எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் : சம்பந்தன்

பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற விதிகள் இருக்கும் போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அந்தப் பதவியை தாங்கள் ஏற்பீர்களா என்று இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது :-

“எதிர்க் கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை. வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம்.

ஆனால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவடுக்கும். எதிர்க் கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரசன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருன் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. பாராளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிர்க் கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது.

இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அந்தப் பதவியில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. எதிர்க் கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை, தானே எதிர்க் கட்சித் தலைவர் என்றும் இதனை எவராலும் மாற்றமுடியாது என்றும் தற்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply