விமான விபத்து: இடைக்கால உதவித் தொகை அறிவிப்பு
பிரான்ஸ் மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால உதவித் தொகையை ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது. தலைநகர் பெர்லினில் இது குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது:
உயிரிழந்த பயணிகள் குடும்பத்தினருக்கு இடைக்கால உதவித் தொகையாக 50 ஆயிரம் யூரோ (சுமார் ரூ. 35 லட்சம்) வழங்க ஜெர்மன்விங்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தவிர, விபத்து தொடர்பான இழப்பீடு தனியாக வழங்கப்படும். இப்போது வழங்கப்படும் இடைக்கால உதவித் தொகையானது, உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக அளிக்கப்படுகிறது என்றார்.
ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டுஸல்டோர்ஃப் நகருக்கு, 150 பேருடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தின் துணை விமானி ஆன்ட்ரியாஸ் லுபிட்ஸ், அந்த விமானத்தை வேண்டுமென்றே வேகமாக இறக்கி, மலை மீது மோதச் செய்தார் என்று தெரிய வந்துள்ளது.
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது நோய் குறித்து விமான நிறுவனத்திடம் மறைத்துப் பணி புரிந்து வந்தார் என்ற விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானால், அதில் காயமடைந்தோருக்கும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டிய இழப்பீடு குறித்து சர்வதேச ஒப்பந்தம் உள்ளது. உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு சுமார் ரூ. 1 கோடி உச்ச வரம்பாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப். எனினும், இந்தத் தொகைக்கும் அதிகமான தொகையை விமான நிறுவனங்கள் அளித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply