யேமனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு
யேமனில் உள்நாட்டுக் கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை அழைத்து வர விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: யேமனில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை அழைத்துவர, தினந்தோறும் 3 மணி நேரம் விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வாங்கியுள்ளோம். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, இந்தியர்களை அழைத்து வர உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா விமானங்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அங்குள்ள நிலைமையை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், “1,500 பேர் பயணிக்கும் வகையில், கப்பல் ஒன்றை அனுப்புவதற்கும் திட்டமிட்டு வருகிறோம்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, யேமனில் இருந்து புறப்பட்ட 80 இந்தியர்கள், சனிக்கிழமை புது தில்லி வந்தடைந்தனர்.
கேரள மக்கள் தவிப்பு: இந்நிலையில், யேமன் தலைநகரமான சனாவில் உள்ள வீடு ஒன்றில், சிக்கிக் கொண்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், உதவி கோரி தகவல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, மலையாளத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வந்துள்ள விடியோ பதிவில், ஜிடோ என்பவர் கூறியுள்ளதாவது:
எங்கள் குழுவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் இருக்கிறோம். சுற்றுப்புறப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டையும், தொடர் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வராமல் சிக்கியுள்ளோம்.
நாங்கள் கடந்த 5 நாள்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எங்களிடம் உணவும், தண்ணீரும் தீர்ந்து 2 நாள்கள் கழிந்து விட்டன. மின்சார இணைப்பு எப்போது துண்டிக்கப்படும் என்று தெரியவில்லை. மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள எங்களுக்கு உள்ள ஒரே வழி இணைய வசதி மட்டுமே.
எங்கள் பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே இயங்கி வருகிறது. நாங்கள் பயத்துடன் இருந்து வருகிறோம். ஏதாவது நடக்கும் முன்பு, எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை அழைத்துச் செல்ல கப்பல் அனுப்பப்பட வேண்டும் என்று அந்த விடியோ பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply