தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் 10 நாட்களுக்கு அவையிலிருந்து நீக்கம்

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி, மேலும் பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எதிர்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, தே.மு.தி.கவின் சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் மோகன் ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அதையடுத்து ஏற்பட்ட அமளியில் தே.மு.தி.க. உறுப்பினர் மோகன்ராஜை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சபாநாயரின் இருக்கை முன்பாக வந்து பேசினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதற்குப் பிறகு, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை இந்தத் தொடர் முழுவதற்கும் நீக்கி, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் சட்டசபையின் உரிமைக் குழுவிற்கும் அனுப்பப்பட்டது.

உரிமைக் குழுவின் தீர்மானத்தை செவ்வாய்க் கிழமையன்று அவையில் வாசித்த சபாநாயகர் தனபால், தே.மு.தி.கவைச் சேர்ந்த சந்திரகுமார், மோகன்ராஜ், பார்த்திபன், வெங்கடேசன், சேகர், தினகரன் ஆகிய ஆறு பேரும் அடுத்த கூட்டத் தொடரில் பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதற்கான ஊதியத்தையோ, சலுகையையோ பெற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உரிமைக் குழுவில் பெரும்பான்மையாக இருக்கும் ஆளும் அ.தி.மு.கவினர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான தண்டனையை அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply