இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம்

இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை கையெழுத்தானது. தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, கனடா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சென்றடைந்தார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை மோடி சந்தித்துப் பேசினார். நீண்டநேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவதற்கான சுமார் ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலானஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழாண்டு முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து மோடி கூறியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, கனடாவின் கேமகோ அணு உற்பத்தி நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ஐந்தாண்டுகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்கப்படும். ரஷியா, கஜகஸ்தான் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடு கனடா ஆகும். இதன் மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள் நிறைவு செய்யப்படும்.

இதேபோல், இந்தியா – கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல் திட்டம் விரைவில் தயாரிக்கப்படும் என்றார் மோடி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply