ஐ.ம.சு.மு 62 எம்.பிக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் தங்காலையில் சந்திப்பு 19ஆவது திருத்தத்தை ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கப் போவதாக கூட்டத்தில் முடிவு
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 62 பேர் உட்பட சுமார் 100 ஐ.ம.சு.மு. மக்கள் பிரதிநிதிகள் நேற்று தங்காலை கால்டன் இல்லத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, டளஸ் அலஹப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, விமல் வீரவன்ச, சாலிந்த திசாநாயக்க, ரஞ்சித் த சொய்சா ரீ.பீ. ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, ஜானக வக்கும்புர, மொஹான் பீ சில்வா, அருந்திக பெர்னாண்டோ, ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜகத் பாலசூரிய, லொஹான் ரத்வத்தை உட்பட 62 எம்.பி.கள் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
இவர்களுடன் பாராளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இதில் கலந்து கொண்டார்.
இதேவேளை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண அமைச்சர் நிமல் லங்சா, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, தென் மாகாண அமைச்சர் டீ.வி. உபுல் உட்பட 30க்கும் அதிகமான மாகாண சபை உறுப்பினர்களும் நேற்று கால்டன் இல்லத்திற்கு வருகை தந்ததாக அறிய வருகிறது.
இவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இடம்பெற்றதோடு பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நியமனம், பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் விவகாரம், மே தின கொண்டாட்டம் உட்பட பல அரசியல் விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டதாக அறிய வருகிறது.கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதியுடன் தனியான கலந்துரை யாடல்களில் ஈடுபட்டனர்.
19 ஆவது திருத்தம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மேலும் ஆராய்ந்த பின்னரே அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதா? இல்லையா? என தீர்மானிப்பதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித் துள்ளனர். இதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில் கொழும்பில் கூடி இது குறித்து இறுதி முடிவு எடுக்க இருப்பதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார்.
19 ஆவது திருத்தத்துடன் தொடர்புள்ள புதிய திருத்தங்கள் பற்றி அநேக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தெளிவு இல்லாததால் அது குறித்து ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply