இந்தியா சந்தித்து வரும் சவால்களுக்கு ஒரே தீர்வு வளர்ச்சி தான்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா சந்தித்து வரும் சவால்களுக்கு ஒரே தீர்வு, வளர்ச்சிதான்” என்று கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) கனடா சென்றார். ஒட்டவா விமான நிலையத்தில் சென்றிறங்கிய அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு கனடா யுரேனியம் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியும் அளித்தனர்.

நேற்று டொராண்டோ சென்ற பிரதமர் மோடி, அங்கு ரிக்கோ கொலிசியம் அரங்கில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், தன் மனைவி லாரீனுடன் சென்று கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் ஒரே ஒரு மருந்தும் உள்ளது. (கூட்டத்தினர் மோடி, மோடி என ஆரவாரித்தனர்.) அது நான் அல்ல. வளர்ச்சிதான் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆகும். வளர்ச்சி மட்டும்தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும். நாட்டில் இதற்கு முன்பிருந்தவர்கள் குப்பைகளை சேர்த்து வைத்து விட்டு போய் விட்டார்கள். நாம் அதை அகற்றுவோம்.

இந்தியா நாடு மிகப்பெரிய நாடு. ஏராளமான குப்பைகள் உள்ளன. அவை நீண்ட காலமாக உள்ளன. அவற்றை அகற்ற கொஞ்ச காலம் பிடிக்கும். ஆனால், மக்களின் மனப்பாங்கு மாறி இருப்பதால் அதை செய்து முடிப்போம். இதற்கு முன்பு நாடு, ‘ஊழல் இந்தியா’ என்று அறியப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதை ‘திறன் வாய்ந்த இந்தியா’வாக அறியச் செய்ய விரும்புகிறோம். நாட்டு மக்களிடம் ஏராளமான வளங்கள் உள்ளன. அவர்களுக்கு தேவைப்படுவது வாய்ப்பு மட்டும்தான்.

இந்திய மக்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தங்கள் நிபுணத்துவத்தை, தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ளுமாறு பல்வேறு நாடுகளை கேட்டுக்கொண்டு வருகிறேன்.

இந்திய மக்கள் தொகையில் 35 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் ஆகும். நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர்கள் உழைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால், நாட்டை (நாட்டின் வளர்ச்சியை) யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கடந்த 10 மாதங்களில், வெளிப்படையான, ஊழல்களற்ற சூழலில் வளர்ச்சிக்கான அணிவகுப்பு தொடங்கி விட்டது. தூய்மையான இந்தியாவைக்  காண அழைப்பு விடுத்தேன். சாமானிய மக்களும், இடங்களை சுத்தம் செய்ய முன் வந்துள்ளனர். 2030-ம் ஆண்டுவாக்கில் உலகில் திறன் வாய்ந்தவர்களுக்கு தேவை அதிகளவில் இருக்கும் என்று கருதுகிறேன். திறன் வாய்ந்தவர்களை வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருக்கும். எனவேதான் எனது அரசு திறன் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவிடம் திறமை உள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையில் வியக்கத்தகு சாதனைகளை இந்தியர்கள் செய்து, நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆனாலும் கூகிள் ஏன் இந்தியாவில் உருவாகவில்லை? வெளிநாட்டில் அதே (இந்திய) திறமைதான் வேலை செய்கிறது. நான் அவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு வழங்க விரும்புகிறேன். அந்த வகையில்தான் ‘அடல் புத்தாக்க திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இளைய தலைமுறையினர் எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். மக்களின் மனப்பாங்கு மாறிவிட்டதையே  இது பிரதிபலிக்கிறது. நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு தர விரும்புகிறோம். இளைய தலைமுறையினர் வேலை தேடுகிறவர்களாக இருக்கக்கூடாது. வேலை உருவாக்கி தருகிறவர்களாக ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

80 கோடி இளைய தலைமுறையினர், 80 கோடி கனவுகள், 160 கோடி கைகள் இருக்கின்றன. நம்மால் சாதிக்க முடியாதா?         இந்தியாவும், கனடாவும் இணைந்து செயல்பட்டால் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் ஆக முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply