19 ஆவது திருத்தம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவில்லை
அரசியலமைப்புக்கான சர்ச்சைக்குரிய 19 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்திருக்கின்றது. 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள், வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து, அதுதொடர்பில் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருந்தபோதிலும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்த விடயங்களை நீக்கிய பின்னர் 19 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 19 வது திருத்தத்துடன் இணைந்ததாக தேர்தல் சீர்திருத்தத்தையும் கொண்டுவர வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்திவருகின்றது. பாராளுமன்றப் பெரும்பான்மை ஐ.தே.க.விடம் இல்லாமையால் சுதந்திரக் கட்சியின் ஆதரவு அதற்கு அவசியமானதாகியிருக்கின்றது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்களின் கூட்டத்தை சபாநாயகர் இன்று அவசரமாகக் கூட்டியிருந்தார். எதிர்வரும் திங்கட்கிழமை இந்தத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதால் அதற்கான இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது.
இருந்த போதிலும், இதில் இணக்கப்பாடு ஏற்படாமையால், திங்கட்கிழமை வரையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையே இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு செவ்வாய்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply