இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் இறுதித் தீர்வு: திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், புதிய அரசியலமைப்பின் கீழ் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாராக இருப்பதாக அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை இணைத்துக்கொள்ள வேண்டுமெனக் கோரி ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளாதபோதும் இறுதித் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் கூறினார்.
“தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல்களில் கலந்துகொள்கின்றனர். ஆனால், ஏன் ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னி ஆகிய கட்சிகள் கலந்துகொள்வதில்லையென எனக்குத் தெரியவில்லை” என்றார் அமைச்சர்.
“இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாங்கள் கூடி ஆராய்வோம். 85 சந்திப்புக்களைத் தொடர்ந்து நாங்கள் இறுதித் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்” என திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.
“மத்திய அரசாங்கத்தின் எந்தவிதமான தலையீடும் இன்றி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாகாணசபைகளின் அதிகாரங்கள் பகிரப்படும்” என அவர் கூறினார்.
ஒன்பது மாகாணசபைகளுக்கும், இரண்டாம் சேம்பருக்கும் மத்தியிலிருந்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், பகிரப்பட்ட அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் எட்டுப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இறுதித் தீர்வு யோசனைத் திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் இறுதிப்படுத்திவிடும் என அந்த ஊடகத்திடம் நம்பிக்கை தெரிவித்திருந்த அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களின் தேவைகளையும் இந்தத் திட்டம் உறுதிப்படுத்தும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply