19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தீர்மானமில்லை : ஜாதிக ஹெல உறுமய கட்சி
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் நடத்துவது வரவேற்கத் தக்க விடயமாக இருந்தாலும் 19 ஆவது திருத்தத்தினை ஆதரிப்பது தொடர் பில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப் பது தொடர்பில் திருப்தியடையவில்லை எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.அரசியல் அமைப்பில் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டினை வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரவேண்டும். அதில் பல நல்ல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என நாம் தான் ஆரம்பத்தில் வலியுறுத்தினோம். ஆனால் 19ஆவது திருத்தம் எதற்காக கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்துமாறி சுயநலமான தன்மைக்கு அமையவே 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. ஜனாதிபதிக்கான சர்வாதிகார போக்கினை கொண்டே அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் இன்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முழுமையாக பிரதமருக்கு கொடுப்பதை நாம் விரும்பவில்லை.
ஆனால் அதற்கான முயற்சிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் நாம் திருப்தியடையவில்லை. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாயின் அதனுடன் இணைந்து 20 ஆவது திருத்தமாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
அதேபோல் 19 ஆவது திருத்தம் தொடர்பில் விவாதம் நடத்துவது தொடர்பில் நாம் முரண்படவில்லை. 19 ஆவது திருத்தத்தின் விடயப்பரப்பு தொடர்பில் விவாதித்து தீர்மானமெடுப்பது அவசியமானதொன்றே. அதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் 19ஆவது திருத்தம் சூழ்ச்சியானதொன்று என்ற கருத்தில் நாம் இன்னும் உறுதியாக இருக்கின்றோம். அதில் தெளிவு இல்லாது எம்மால் 19ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிக்க முடியாது. எனவே 19ஆவது திருத்தத்திற்கு எமது ஆதரவு தொடர்பில் நாம் (இன்று) நாளை கூடி முடிவெடுப்போம். ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பினை மேற் கொண்டு இவ் விடயங்கள் தொடர்பில் பேசவுள்ளோம். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply