இடம்பெயர்ந்த மக்களை முகாம்களுக்குள் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்: கெலின்
பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. நிபுணர் வோல்டர் கெலின், இலங்கை அரசாங்கத்திடமும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் சகல உதவிகளையும் வழங்கவேண்டும். அவர்களை முகாம்களுக்குள் கட்டுப்படுத்தி வைக்காமல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதியான வோல்டர் கெலின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இடம்பெயர்ந் தோர் தொடர்பான கூட்டமொன் றில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார்.
உலகமெங்கும் 26 மில்லியன் மக்கள் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர். சோமாலியா, இலங்கை, சூடான் ஆகியன மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை நிலைவரம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் வடக்கில் போர் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அரசாங்கம் புலிகளும் அனுமதிக்க வேண்டும். மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தி வைக்கப்படாமல் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் அவர்களுக்கு உதவிகள் பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.
சோமாலியாவில் 13 லட்சம் மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் உணவு, நீர், சுகதார சேவைகள் கிடைக்காமையால் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் கெலின் குறிப்பிட்டார்.
சூடானில் மொத்தமக 50 லட்சம் பேர்இடம் பெயர்ந்திருப்பதாகவும் அவர்களில் 27 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதாகவும் மனிதாபிமான உதவிகளில் தங்கியிருப்பதாகவும் கொலின் தெரிவித்துள்ளார். சூடானிய அரசாங்கத்தால் 13 சர்வதேச தொண்டர் நிறுவனங்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை மற்றும் சூடானின் 3 அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்யப்பட்டமை ஆகியன குறித்தும் அவர் கவலை தெரிவித்ததுடன் அப்பிராந்தியத்தில் மனிதப் பேரவலத்தை அவதானிக்க முடியும் எனக் கூறினார்.
காலநிலை மாற்றமும் இடம்பெயர்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டிய கெலின் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதற்கும் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும் இருப்பதற்கும் அரசாங்கங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply