எமது சமூகச் சூழலின் அவல நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு

திருகோணமலை சென். மேறீஸ் கல்லூரி வாசலில் வைத்து கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 6 வயது மாணவி அவளது குடும்பத்தவர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியவர்களினால் கொலை செய்யப்பட்டு வீதியோரத்தில் உரப்பையொன்றுக்குள்ளிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரு மாதங்களுக்கு முன்னர் தனது பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கிய வர்ஷா ஜூட் றெஜி என்ற இந்த முதலாம் வகுப்பு பச்சிளம் பாலகியின் வாழ்வு குருத்திலேயே கருக்கப்பட்ட படுபாதகச் சம்பவம் திருகோணமலை பகுதியில் மாத்திரமல்ல, நாடுபூராவும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தைத் தோற்றுவித்திருக்கிறது. தங்களது பிள்ளைச் செல்வங்களை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் வீடு திரும்பும் வரை வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் தாய்மாரும் தந்தையரும் பணத்துக்காக பழிபாவத்துக்கு அஞ்சாத பாதகர்களிடமிருந்து தங்கள் பிள்ளைகளுக்கும் இத்தகைய ஆபத்து வந்து விடுமோ என்று ஏங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாடசாலை முடிந்ததும் வாசலில் காத்திருந்து வழமையாக வருகின்ற முச்சக்கர வண்டியில் ஏறி வீடு சென்று தாயின் அரவணைப்பை அனுபவித்த பாலகி வர்ஷா விதிவசமான அன்றைய தினம் தன்னை ஏமாற்றிக் கூட்டிச் சென்றவர்களிடமிருந்து தனக்கு இத்தகையதொரு கொடூர முடிவு வருமென்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாதளவுக்கு பக்குவம் குறைந்தவள். அவளைக் கொலை செய்யக் கூடிய அளவுக்கு கல்நெஞ்சம் கொண்ட அந்த பாதகர்களை சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்ச தண்டனை கிடைக்கச் செய்தாலும் கூட மனம் ஆறுதல் அடையுமென்று சொல்ல முடியாது. குடும்பத்தவர்களை மிரட்டிப் பணத்தைப் பெறவேண்டுமென்பதற்காக அந்தப் பாலகிக்கு கொடுமை செய்து உயிரைப்போக்கிற அளவுக்கு சக மனிதப் பிறவிகளின் வலியை உணரும் உணர்வு இல்லாமல் மரத்துப் போனவர்கள் அந்தப் பாதகர்கள்.

இன்று எமது சமுதாயம் மிருகத்தனமான செயல்களை கிஞ்சித்தும் யோசனையின்றிச் செய்யக் கூடியவர்களை கணிசமான எண்ணிக்கையில் கொண்டிருக்கிறது. வன்முறைமயப்பட்ட சமுதாயத்திலே குரூர உணர்வுகளும் வக்கிரத்தனமும் மேலோங்குவதற்கு தாராளமாகவே வாய்ப்புகள் இருக்கின்றன. கால்நூற்றாண்டுக்கு அதிகமான காலமாகத் தொடருகின்ற உள்நாட்டுப் போரின் விளைவாக மனித வாழ்வின் கௌரவம் மலினப்பட்டுப் போயிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மனித உயிர் எந்த யோசனையுமின்றிச் செலவிடத்தக்கதொன்றாக மாறியிருக்கும் விபரீதமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எந்தவழியில் என்றாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணத்தைச் சம்பாதிப்பதென்பது தவறான ஒரு போக்காக இன்று பலருக்குத் தெரிவதில்லை. ஆயுதங்களைக் காட்டி, ஆட்களைக் கடத்தி கோடி கோடியாக அபகரித்த சக்திகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்படாமல் இருக்கின்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை பழிபாவத்துக்கு அஞ்சாத பிரகிருதிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் பிரகிருதிகள் சுலபமான வழியில் பணத்தை அடைய ஆட்கடத்தல்களில் ஈடுபடத் துணிச்சல் கொள்கிறார்கள். சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியுமென்ற ஒரு அசட்டு நம்பிக்கை இவர்கள் மத்தியில் வளர்ந்திருக்கிறது.

இத்தகையவர்களில் ஒரு சிலரே திருகோணமலையில் வர்ஷாவின் மரணத்துக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள். பாவம், இந்த பாலகிக்கு நேர்ந்த கதி எமது சமூகச் சூழலின் அவல நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. குரூர மயப்பட்ட சமூகச் சூழ்நிலையிலே, அதுவும் பணம் தான் தெய்வம் என்கிற நிலை ஏற்படுகின்ற போது ஏனைய மனித உணர்வுகளும் வாழ்வியல் ஒழுக்கங்களும் தகர்ந்து விடுகின்றன. மனிதாபிமானம் மடிந்துபோகிறது!

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.