கோட்டா தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது

அரசியல் நோக்கங்களுக்காக சட்டத்தைப் பயன்படுத்த முனை வோருக்கு கோட்டாய ராஜபக்ஷ தொடர்பில் நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பதிலடியாக அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். பலமுள்ள அரசியல்வாதிகளை பலமிழக்கச் செய்து அவர்களை மெளனிக்கச் செய்து செயற்பட விடாமல் செய்வதும் பொதுமக்கள் மத்தியில் அவர்களை கெட்டவர்களாகக் காட்ட முனைவதுமே சிலரது நோக்கம் என குறிப்பிட்ட ஜீ. எல். பீரிஸ், இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமவில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல. பீரிஸ் எம்.பி, பந்துல குணவர்தன எம்.பி. மற்றும் மனுஷ நாணயக்கார எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இங்கு பேராசிரியர் பீரிஸ் தொடர்ந்தும் விளக்குகையில்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

அவரை விவாரணை செய்த விசேட நிதி மோசடிகள் சம்பந்தமான பிரிவு அரசியல் சார்ந்தது என்பதையே நாம் குறிப்பிட விரும்புகின்றோம். குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எனினும் அரசியல் நோக்கங்களுக்காக இத்தகைய விடயங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது. குற்றங்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு எதிராக தண்டனை வழங்குவதன்றி அரசியல்வாதிகளை அவர்கள் அரசியல் செய்வதற்குள்ள சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளை வெளிப்படையாக இந்நாட்களில் காண முடிகிறது.

இதனைக் கவனத்திற் கொண்டே உயர் நீதிமன்றம் கோதாபய ராஜபக்ஷவின் வழக்கு முடியும் வரை அவரைக் கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை அவரைக் கைது செய்யக்கூடாது என்பதே அந்த தீர்ப்பு. அவ்வாறு கைது செய்வது சட்டவிரோதமான செயல் என்பதே நீதிமன்றத்தின் கூற்றாகும்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை கோதாபய ராஜபக்ஷவை சிறைத் தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது என்பதையே நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பொலிஸ் சட்டத்துக்கு அமைய பொலிஸ் துறையில் பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு மட்டுமே உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

இங்கு நடந்தது என்ன? பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து என்றால் அமைச்சரவை உப குழுவிடமிருந்து. அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இவர் மூலமே இந்த குழு நிர்வகிக்கப்படுகிறது.

சட்டப்படி அரசியல் அழுத்தங்கள் இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ள போதும் கோதாபய ராஜபக்ஷவின் விடயங்களில் அரசியல் தலையீடுகளே உள்ளன.

மே மாதம் தேசிய நிறைவேற்றுச் சபை தன்னிச்சையாக அவரை கைதுசெய்யுமாறு கூறியுள்ளது. எனினும் எமது சட்டத்தில் அது போன்றதொரு சபைக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை என்பது உறுதியாகிறது. இந்த வகையில் இது அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளி வாகின்றது.

அரசியல் பலமுள்ளவர்களை மெளனிக்கச் செய்து அவர்களுக்கு பாதிப்பு எற்படுத்தி அவர்களை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதே இதன் நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply