வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்பு தொடரும்: ஒபாமா உறுதி
ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலையிலும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா தொடர்ந்து பக்கபலமாக இருக்கும் என ஒபாமா உறுதியளித்துள்ளார். வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஒபாமா கூறியதாவது:
வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் நாடுகளின் பாதுகாப்புக்கு பிற நாடுகளிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடும்.
வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக, தேவைப்பட்டால் ராணுவ பலத்தையும் அமெரிக்கா பயன்படுத்தும்.
அந்த நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அளித்துள்ள வாக்குறுதியில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. எங்கள் வாக்குறுதிக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், வளைகுடா நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். அதிக அளவில் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, இந்த நாடுகளுடன் இணைந்து அதிகரிக்கப்படும். ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திறனை வளைகுடா நாடுகள் பெறுவதற்கான கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும்.
வளைகுடா நாடுகளிடையே ஏற்படும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா முன்முயற்சிகளை எடுக்கும்.
அமெரிக்காவுக்கும், வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் நாடுகளுக்கும் ஈரானுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவதில் விருப்பமில்லை.
இந்தப் பிராந்தியத்துக்கு ஈரான் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே நமது விருப்பம் என்றார் ஒபாமா.
அணுசக்தி ஒப்பந்தம்: மீண்டும் பரிசீலிக்க அனுமதியளிக்கும் மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்படவிருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை, தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யவும், ரத்து செய்யவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.
கீழவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 400 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் பதிவாகின.
இதையடுத்து. அந்த மசோதா அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத்தலைவர் ஜான் போஹ்னர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply