சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்கமைய அரசு மாற்று நடவடிக்கை
சம்பூரில் மீள்குடியேற்றத்துக்கென காணிகளை விடுவிக்கும் விடயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய மாற்று நடவடிக்கை குறித்து தீர்மா னிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக் கைளை எடுக்க எதிர்பார்த்திருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சம்பூரில் 818 ஏக்கர் நிலப்பரப்பு முதலீட்டு ஊக்குவிப்புசபைக்கு வழங்கப்பட்டது. இந்தக் காணிகளை மீளப் பெற்று பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்குப் பயன்படுத்த தீர்மானித்த புதிய அரசாங்கம், இக்காணிகளை விடுவித்தது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப் பத்துடன் அண்மையில் வெளியிடப் பட்டது.
இந்தக் காணிகள் விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் முதலீட்டு சபைக்கு ஒதுக்கப்பட்ட காணியில் முதலீடு செய்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டன. இதற்கமைய விடுவிக் கப்பட்ட சம்பூர் காணிகளைப் பார்க்கச் சென்றவர்கள் கடந்த சனிக்கிழமை பொலிஸாரால் திருப்பியனுப்பப் பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் சில நிறுவனங்கள் இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றிருப்பதாக தான் ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாகத் தனக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லையென்றும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
சம்பூர் காணி விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் எடு கோளின் அடிப்படையில் எந்தவொரு தீர்மானத்துக்கும் வர விரும்பவில்லை. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் அதற்கு அமைய மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் ஆராயும்.
“இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுதொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்சாட்டுக்கு இலக்காக விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், சம்பூரில் உள்ள கடற்படை பயிற்சி முகாமை வேறிடத்திற்கு மாற்றி அந்தக் காணிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடையுத்தரவால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply