தமிழக முதல்வராக 23-ந் தேதி பதவியேற்கிறார் ஜெயலலிதா: மத்திய மந்திரி அருண் ஜெட்லி பங்கேற்பு?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக வரும் 23-ந் தேதி பதவியேற்பார் என தெரியவந்துள்ளது. அவரது பதவியேற்பு விழாவில் அருண் ஜெட்லி உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பலரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். இவ்விழாவில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் சோ உள்பட தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் கணீர் கணீர் என்று பேசிய முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், துரதிருஷ்டவசமாக  சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தால், கடந்த செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. இவ்வழக்கின் மேல் முறையீட்டில் கடந்த 11ம் தேதி ஜெயலலிதா விடுதலையானார்.

இதையடுத்து போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் முன்பும், லாயிட்ஸ் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் குவிந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டனர். உடனடியாக ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்று கட்சி தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அதிமுக தலைமை கழகம் கடந்த 15-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வரும் 22-ந் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அதே சமயம் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாக ஆர். கே. நகர். சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதியேற்பார் என தெரியவந்துள்ளது. இவ்விழாவில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply