ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: நாளை முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் கடந்த 7 மாதங்களாக முதல்–அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்க நேரிட்டது. வழக்கில் இருந்து அவர் கடந்த 11–ந்தேதி விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்–அமைச்சராக தேர்ந்து எடுப்பதற்கான நடைமுறைகள் கடந்த வாரம் தொடங்கியது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடிதான் முதல்வரை தேர்வு செய்யும் தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்பதால், அதற்கான கூட்டம் 22–ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று அதிகாலை 6 மணி முதலே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரத் தொடங்கினார்கள்.
6.30 மணிக்கெல்லாம் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தலைமை கழகத்துக்கு வந்து விட்டனர். 6.45 மணிக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வந்தனர்.
ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைமை கழகம் முன்பு திரண்டிருந்தனர். இதனால் அவ்வை சண்முகம் சாலை பகுதி விழாக் கோலாமாகக் காணப்பட்டது.
சட்டசபையில் உள்ள மொத்தம் 234 எம்.எல்.ஏ.க் களில் அ.தி.மு.க. சார்பில் 152 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதில் சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆகிய 4 பேர் அடங்குவார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது. சபாநாயகர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது. அக்ரி கிருஷ்ண மூர்த்தி சிறையிலும் செந்தூர் பாண்டியன் மருத்தவமனையிலும் உள்ளனர்.
இந்த 8 பேரையும் தவிர்த்து மீதம் உள்ள அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் 144 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தே.மு.தி.க.வைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மாபா.பாண்டிய ராஜன், தமிழ் அமுதன், சுரேஷ், மைக்கேல் ராயப்பன், அருண்சுப்பிரமணியன், சாந்தி ஆகிய 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
சரியாக 7 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக (முதல் – அமைச்சராக) ஜெயலலிதா ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்து முன்மொழிந்தார். நத்தம் விசுவநாதன் அதை வழிமொழிந்தார்.
இதையடுத்து அந்த தீர்மானம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
10 நிமிடங்களில் அதாவது 7.10 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
அதன் பிறகு அந்த தீர்மான கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய 5 பேரும் போயஸ் கார்டனுக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதாவை சந்தித்து தீர்மான கடிதத்தை கொடுத்தனர்.
பிறகு அவர்கள் ஜெயலலிதாவிடம் விடை பெற்று 7.45 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் ஆகிய 4 பேரும் ஒரே காரிலும் பழனியப்பன் மற்றொரு காரிலும் சென்றனர். 7.55 மணிக்கு கவர்னர் ரோசய்யாவை அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது கவர்னர் ரோசய்யாவிடம், ஓ.பன்னீர் செல்வம் முதல்–அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவர் ராஜினாமாவை ரோசய்யா ஏற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வத்தை ரோசய்யா கேட்டுக் கொண்டார்.
அதன்பிறகு அ.தி.மு.க. சட்டசபை கட்சியின் புதிய தலைவராக ஜெயலலிதா தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான தீர்மானத்தை கவர்னர் ரோசய்யாவிடம் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். அதை ரோசயய்யா ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து கவர்னருக்கு நன்றி தெரிவித்து விட்டு ஓ.பன்னீர் செல்வமும் மற்ற அமைச்சர்களும் 8.08 மணிக்கு புறப்பட்டனர். மீண்டும் அவர்கள் போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள்.
இதற்கிடையே ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் ரோசய்யா காலை 8.30 மணிக்கு அழைப்பு விடுத்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அறிவிக்கை கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஜெயலலிதாவை விரைவில் ஆட்சி அமைக்க வருமாறு தமிழக கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் புதிதாக பதவி ஏற்கும் மந்திரிகள் பட்டியலை அவர்களது இலாகா விவரங்களுடன் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னரின் அழைப்பை ஏற்று இன்று மதியம் கவர்னர் ரோசய்யாவை, ஜெயலலிதா சந்திக்கவுள்ளார். அப்போது அவர் புதிய மந்திரிகள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார்.
பிறகு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்படும் ஜெயலலிதா கிண்டி, சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு வருவார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்.
பின்னர் வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார். அதன் பிறகு சேப்பாக்கம், கடற்கரை சாலை, டி.ஜி.பி. அலுவலகம், ராதாகிருஷ்ணன் சாலை வழியாக ஜெமினி பாலம் பகுதிக்கு வந்து பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்.
இதையொட்டி சென்னை நகரில் ஜெயலலிதா செல்லும் சாலை பகுதிகள் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. 7 மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியில் வருவதால் அவரை காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
கவர்னர் சந்திப்பு, சிலைகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிற்பகல் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்புவார். பிறகு அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. முதல்–அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்பார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். புதிதாக 2 பேர் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பதவி ஏற்பு விழா நடைபெறும் இடம் புதுப்பொலிவுக்கு மாறி உள்ளது. அங்கு ஜெயலலிதாவை காண பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply