சாதி வெறியின் உச்சம்: அம்பேத்கர் ரிங்டோன் வைத்திருந்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற ஆதிக்க சாதியினர்
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்திருந்த தலித் வாலிபரை ஆதிக்க சாதியினர் 8 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் கடந்த 16 ஆம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஷீரடிக்கு சென்றார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் தனது உறவினர்கள் 2 பேருடன் உள்ளூரில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று பீர் குடித்துள்ளார். அப்போது சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.தலித் சமூகத்தை சேர்ந்த சாகர், அம்பேத்கர் பற்றிய பாடலை (உங்கள் தேவைகளுக்காக போராடுங்கள். அம்பேத்கரின் கோட்டை வலுவானது) ரிங்டோனாக வைத்துள்ளார். இந்த பாடல் ஒலித்ததைக் கேட்டு கடுப்பான ஆதிக்க சாதியைச் சேர்ந்த 8 பேர் அவரை பீர் பாட்டிலால் அடித்து பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் சாகரை சித்திரவதை செய்து அவர் மீது பைக்கை ஏற்றி கொலை செய்துள்ளனர். மராதா மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த அந்த 8 பேர் சாகரின் உடல் மீது மீண்டும் மீண்டும் பைக்கை ஏற்றி அவரது உடலை உரு தெரியாமல் சிதைத்துள்ளனர்.
அன்று மாலை 6.30 மணிக்கு ரூய் கிராமம் அருகே சாகரின் உடல் நிர்வாணமாக கிடப்பதை மக்கள் பார்த்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மதுபானக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் சாகரை தாக்கிய 8 பேரின் அடையாளமும் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷால் கோடே, சோம்நாத், ரூபேஷ் வாதேகர், சுனில் ஜாதவ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
ஷீரடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானக் கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து கடையின் மேலாளர் கூறுகையில், ”அந்த 8 பேர் சாகரை அடிக்கத் துவங்கியதும் நான் மதியம் 1.45 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தேன். ஆனால் நெடுநேரமாகியும் அவர்கள் வரவில்லை” என்றார். சாகரின் உறவினர்கள் கடையில் இருந்து தப்பியோடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் கூட பலனில்லை. இதனால், காவல்துறையினர் ஆதிக்க ஜாதியினருக்கு சாதகமாக செயல்பட்டனர் என்பது வெளிப்படையாக தெரிகிறதென்று அப்பகுதி மக்களும், சாகரின் உறவினர்களும் காவல்துறை மீது குற்றம்சாட்டுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply